இந்தியாவுடனான தோல்வி எதிரொலி; பாபர் ஆசாம் பதவி விலக கோரிக்கை!
2022 டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான அணி தோல்வியை தழுவியது. 160 ரன்கள் என்ற இலக்கை பாகிஸ்தான அணி இந்தியாவுக்கு நிர்ணயித்தது. இதில் பாபர் அசாம் கோல்டன் டக் ஆகி வெளியேறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்திய அணி கடைசி ஓவரில் 16 ரன்கள் அடிக்க வேண்டும் என இக்கட்டான நிலையில் இருந்த போது சுழற் பந்துவீச்சாளரை பாபர் அசாம் பயன்படுத்தியது சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் பாபர் அசாமின் கேப்டன்ஷி சரி இல்லை என்று அந்நாட்டில் விமர்சனம் தொடங்கியுள்ளன. மேலும் கேப்டன்ஷியால் ஏற்படும் அழுத்தத்தால் பாபர் அசாம், பேட்டிங்கிலும் சொதப்பி வருவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சலீம் மாலிக் பாபர் அசாம் கேப்டன்ஷிப் பதவியை விட்டு விலகுவது தான் அவருக்கு நல்லது என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பேசிய அவர் "நெருக்கடியான கட்டத்தில் சீனியர் வீரர்கள் அணியில் முக்கிய பங்காற்ற வேண்டும். கேப்டன் நல்ல முடிவை எடுக்க முடியவில்லை என்றால் சீனியர்களிடம் சென்று பேச வேண்டும்.
நான் என்ன தவறு செய்கிறேன் என்று கேட்டு தெளிவு பெற வேண்டும். அதனால் தான் சொல்கிறேன் வேகுப்பந்துவீச்சாளர்கள் பந்து வீசும் போது ஒரு சீனியர் வீரர் அவர் பக்கத்தில் இருக்க வேண்டும் .அவர் பவுலருக்கு அறிவுரை வழங்க வேண்டும்.ஆனால் இதனை பாகிஸ்தான் கற்றுக் கொண்டது போல் தெரியவில்லை. தொடர்ந்து ஒரே தவறை திரும்பத் திரும்ப செய்து கொண்டிருக்கிறார்கள்.
பாகிஸ்தான அணியை உங்களால் சிறப்பாக வழி நடத்த முடியவில்லை என்றால் தயவு செய்து அந்த பொறுப்பில் இருந்து விலகி விடுங்கள்.பலரும் இதுபோன்ற நிலையில் கேப்டன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்கள். ஒரு தவறை நீங்கள் திரும்பத் திரும்ப செய்கிறீர்கள் என்றால் கேப்டன் பதவியை விட்டு விலகுவதில் எந்த தவறும் கிடையாது" என்று அவர் கூறியுள்ளார்.
எப்போதும் சுழற்பந்துவீச்சாளரை கடைசி ஓவர் தருவது பெரும் சிக்கலை தான் ஏற்படுத்தும். இதனால் பாபர் அசாம் சுழல் பந்துவீச்சாளரை போட்டியின் நடுவிலேயே பயன்படுத்தி இருக்க வேண்டும் என்ற விமர்சனம் வைக்கப்படுகிறது. எப்படி விராட் கோலி கேப்டன்ஷிப் நெருக்கடியால் தனது பார்மை இழந்தாரோ பாபர் அசாமும் அதே போன்ற சிக்கலை சந்தித்து வருகிறார். இதுவும் கடந்து போகும் என பாபர் அசாம் சொன்ன வார்த்தைகள் தான் தற்போது நினைவுக்கு வருகிறது.