ஐஎல்டி20: டாம் கரண், ஹசரங்கா அசத்தல்; இறுதிப்போட்டிக்கு முன்னேறியது டெஸர்ட் வைப்பர்ஸ்!

Updated: Thu, Feb 09 2023 10:18 IST
Image Source: Google

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஐஎல்டி20 தொடரின் முதல் சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற குவாலிஃபையர் ஆட்டத்தில் டெஸர்ட் வைப்பர்ஸ் - கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. நட்சத்திர வீரர்கள் அலெக்ஸ் ஹேல்ஸ், காலின் முன்ரோ ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான முஸ்தஃபா 23 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

பின்னர் ஜோடி சேர்ந்த சாம் பில்லிங்ஸ் - வநிந்து ஹசரங்கா ஆகியோர் சிறப்பாக விளையாடி தலா 31 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த ரூதர்ஃபோர்ட் அதிகபட்சமாக 37 ரன்களைச் சேர்க்க, டாம் கரன் தனது பங்கிற்கு 29 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களைச் சேர்த்தது. கல்ஃப் தரப்பில் கிறிஸ் ஜோர்டன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிக்கு ஜேம்ஸ் வின்ஸ் - கிறிஸ் லின் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் வின்ஸ் 21 ரன்களிலும், கிறிஸ் லின் 26 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த காலின் கிராண்ட்ஹோம் 11 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

அதன்பின் ஷிம்ரான் ஹெட்மையர் ஒருபக்கம் அதிரடி காட்ட, மறுபக்கம் டேவிட் வைஸ், கார்லோஸ் பிராத்வைட், டாம் பாண்டன் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின் 36 ரன்களை எடுத்திருந்த ஹெட்மையரும் 36 ரன்னுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த வீரர்களாலும் தக்கப்பிடிக்க முடியவில்லை.

இதனால் 19.4 ஓவர்களில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்களை மட்டுமே எடுத்தது. டெஸர்ட் வைப்பர் தரப்பில் டாம் கரன் 4 விக்கெட்டுகளையும், வநிந்து ஹசரங்கா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை