ஐஎல்டி20 2024: நைட் ரைடர்ஸை பந்தாடி வாரியர்ஸ் அபார வெற்றி!

Updated: Wed, Feb 07 2024 23:02 IST
ஐஎல்டி20 2024: நைட் ரைடர்ஸை பந்தாடி வாரியர்ஸ் அபார வெற்றி! (Image Source: Google)

ஐஎல்டி20 என்றழைக்கப்படும் இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரின் இரண்டாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 25ஆவது லீக் போட்டியில் அபுதாபி நைட் ரைடர்ஸ் - ஷார்ஜா வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஷார்ஜா வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியில் ஜோ கிளார்க் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த மைக்கேல் பெப்பர் - அலிஷான் ஷரஃபு இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் 26 ரன்களில் அலிஷான் ஷரஃபு விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 32 ரன்கள் எடுத்திருந்த மைக்கேல் பெப்பரும் விக்கட்டை இழந்தன. 

அதைத்தொடர்ந்து களமிறங்கிய் சாம் ஹைன் 8, இமாத் வசீம் 4, லௌரி எவான்ஸ் 13, ரவி போபாரா 0, டேவிட் வில்லி 5, சாகர் கல்யாண் 1, சுனில் நரைன் 0 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் நைட் ரைடர்ஸ் அணி 17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 94 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷார்ஜா அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஆதில் ரஷித் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதைத்தொடர்ந்து 95 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கு நிரோஷன் டிக்வெல்லா - டாம் கொஹ்லர் காட்மோர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதிம் கேப்டன் டாம் கொஹ்லர் காட்மோர் ஒரு ரன்னை மட்டுமே எடுத்த நிலையில் ஜோஷுவா லிட்டில் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

அதன்பின் இணைந்த டிக்வெல்லா - லியாம் லிவிங்ஸ்டோன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் என 30 ரன்களில் நிரோஷன் டிக்வெல்லாவும், 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 30 ரன்கள் எடுத்திருந்த லியாம் லிவிங்ஸ்டோனும் இமாத் வசிம் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இதையடுத்து களமிறங்கிய மார்ட்டின் கப்தில் 13 ரன்களையும், ஜோ டென்லி 18 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 13.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியளின் 4ஆம் இடத்திற்கும் முன்னேறியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை