ஐஎல்டி20 2024 இறுதிப்போட்டி: துபாய் கேப்பிட்டல்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ்!

Updated: Sun, Feb 18 2024 12:06 IST
ஐஎல்டி20 2024 இறுதிப்போட்டி: துபாய் கேப்பிட்டல்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை இந்தியன (Image Source: Google)

ஐஎல்டி20 என்றழைக்கப்படும் இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரின் இரண்டாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இத்தொடரின் பிளே ஆஃப் சுற்று முடிவில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் மற்றும் துபாய் கேப்பிட்டல்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்த இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற துயாப் கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்கு முகமது வசீம் - குசால் பெரேரா இணை தொடக்கம் கொடுத்தனர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 77 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் அரைசதம் அடிப்பா என எதிர்பார்க்கப்பட்ட முகமது வசீம் 3 பவுண்டரி, 3 சிக்சகள் என 43 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து குசால் பெரேராவும் 38 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஆண்ட்ரே ஃபிளெட்சர் - நிக்கோலஸ் பூரன் இணையும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆண்ட்ரே ஃபிளெட்சர் அரைசதம் கடந்த கையோடு, 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 53 ரன்களைச் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தார். ஆனாலும் மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் சிக்சர்களாக விளாசிய தள்ளிய கேப்டன் நிக்கோலஸ் பூரன் 26 பந்துகளில் அரைசதம் கடந்ததுடன், 2 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 57 ரன்களைச் சேர்த்து அசத்தினார்.  இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களைக் குவித்தது.

இதனைத்தொடர்ந்து 209 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி துபாய் கேப்பிட்டல்ஸ் அணி விளையாடியது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் லூயிஸ் டு ப்ளூய் ரன்கள் ஏதுமின்றியும், டாம் அபேல் 14 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அவர்களைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த மற்றொரு தொடக்க வீரர் டாம் பாண்டன் ஒரு பவுண்டரி, 3 சிக்சர்கள் என 35 ரன்கள் சேர்த்து விக்கெட்டை இழந்தார். 

பின்னர் களமிறங்கிய கேப்டன் சாம் பில்லிங்ஸ் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் களமிறங்கிய சிக்கந்தர் ரஸா 10, ரோவ்மன் பாவெல் 8 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, சாம் பில்லிங்ஸும் 40 ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த ஜேசன் ஹோல்டர் 24 ரன்களையும், ஸ்காட் குகெலீஜ்ன் 19 ரன்களைச் சேர்த்த நிலையிலும் துபாய் அணியால் இலக்கை எட்ட முடியவில்லை. 

இதனால் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்களை மட்டுமே எடுத்தது. எமிரேட்ஸ் அணி தரப்பில் டிரெண்ட் போல்ட், விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தியாதுடன் ஐஎல்டி20 லீக் தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகனாக நிக்கோலஸ் பூரனும், தொடர் நாயகனாக சிக்கந்தர் ரஸாவும் தேர்வு செய்யப்பட்டனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை