இன்டர்நேஷனல் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் - டெஸர்ட் வைப்பர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள துபாய் கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்கு ரொஹன் முஸ்தஃபா - அலெக்ஸ் ஹேல் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். இதில் ஆரம்பம் முதலே அபாரமாக விளையாடிய முஸ்தஃபா அரைசதம் கடந்து அசத்தினார். அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 81 ரன்களையும் பார்ட்னர்ஷிப் முறையில் அமைத்தனர். இதில் அரைசதம் கடந்த கையோடு முஸ்தஃபா 50 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடிய மற்றொரு தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 49 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய அசாம் கான் ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் காலின் முன்ரோ 16 ரன்களிலும், ரூத்ர்ஃபோர்ட் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இறுதியில் வநிந்து ஹசரங்கா 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆடம் ஹோஸ் 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 35 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினீஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 6 விக்கெடுகளை இழந்து 169 ரன்களைச் சேர்த்தது. கேப்பிட்டல்ஸ் தரப்பில் சமீரா, ஹோல்டர், ரஸா, அகிஃப் மற்றும் குகெலிஜின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பாற்றின.