ஐஎல்டி20 2024: கல்ஃப் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது டெஸர்ட் வைப்பர்ஸ்!
இன்டர்நேஷனல் லீக் டி20 என அழைக்கப்படும் ஐஎல்டி20 தொடரின் இரண்டாவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் மற்றும் டெஸர்ட் வைப்பர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெஸர்ட் வைப்பர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிக்கு ஜேமி ஸ்மித் - கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜேம்ஸ் வின்ஸ் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து ஜேமி ஸ்மித்தும் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த கிறிஸ் லின் - ஜோர்டன் காக்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கிறிஸ் லின் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 7 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 63 ரன்கள் எடுத்த நிலையில் கிறிஸ் லின் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோர்டன் காக்ஸும் 32 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஷிம்ரான் ஹெட்மையர் 11 ரன்களுக்கும், கிறிஸ் ஜோர்டன் 14 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர்.
இறுதியில் உஸ்மான் கான் தனது பங்கிற்கு 16 ரன்களையும், டோமினிக் டார்க்ஸ் 7 ரன்களையும் சேர்த்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களைச் சேர்த்தது. டெஸர்ட் வைப்பர்ஸ் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஷாஹீன் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இழக்குடன் களமிறங்கிய டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்கு கேப்டன் காலின் முன்ரோ - அலெக்ஸ் ஹேல்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் முன்ரோ 6 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து அலெக்ஸ் ஹேல்ஸும் 21 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஆடம் ஹோஸ் - வநிந்து ஹசரங்கா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் பவுண்டரிகளாக விளாசிய வநிந்து ஹசரங்கா 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 42 ரன்கள் எடுத்து நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட, மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்த ஆடம் ஹோஸூம் 39 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இஉந்த அசாம் கான் 26 ரன்களையும், ரூதர்ஃபோர்ட் 20 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
இதன்மூலம் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி இந்த சீசனில் தங்களது முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த வநிந்து ஹசரங்கா ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.