ஐஎல்டி20: ரூதர்ஃபோர்ட் அதிரடியில் டெஸர்ட் வைப்பர்ஸ் வெற்றி!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஐஎல்டி20 லீக் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 25ஆவது லீக் ஆட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் - டெஸர்ட் வைப்பர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற துபாய் கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய டெஸர்ட் வைப்பர்ஸ் அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ், காலின் முன்ரோ ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதையடுத்து மற்றொரு தொடக்க வீரரான முஸ்தஃபா 31 ரன்களிக்கு விக்கெட்டை இழக்க, பின்னர் வந்த வநிந்து ஹசரங்காவும் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த சாம் பில்லிங்ஸ் - ரூதர்ஃபோர்ட் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதமடிக்க அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதன்மூலம் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய துபாய் கேப்பிட்டல்ஸ் அணியில் ஜார்ஜ் முன்செ ரன் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதன்பின் ராபின் உத்தப்பா - சிக்கந்தர் ரஸா ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் 30 ரன்களில் உத்தப்பாவும், 41 ரன்களில் ரஸாவும் விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் வந்த தசுன் ஷனகா 11 ரன்களில், ரோவ்மன் பாவெல் 33 ரன்களிலும், யுசூப் பதான் 5 ரன்னிலும், சமிகா கருணரத்னே 10 ரன்களிலும் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை மட்டுமே எடுத்தது. டெஸர்ட் வைப்பர்ஸ் தரப்பில் ஷெல்டன் காட்ரோல், லுக் வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன்மூலம் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி வெற்றிபெற்றது.