ஐஎல்டி20: துபாய் கேப்பிட்டல்ஸுக்கு 150 டார்கெட்!

Updated: Sat, Jan 28 2023 21:29 IST
ILT20: Dubai Capitals restricted Desert Vipers by 149 runs! (Image Source: Google)

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஐஎல்டி20 தொடரின் முதல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 20ஆவது லீக் ஆட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் - டெஸர்ட் வைப்பர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. துபாயில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய டெஸர்ட் வைப்பர்ஸ் அணியில் ரோஹன் முஸ்தஃபா, அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதையடுத்து களமிறங்கிய காலின் முன்ரோ - சாம் பில்லிங்ஸ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய முன்ரோ 32 பந்துகளில் 40 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, சாம் பில்லிங்ஸ் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனையடுத்து வந்த வநிந்து ஹசரங்காவும் 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

இறுதியில் டாம் கரண் - ருதர்ஃபோர்ட் ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் ருதர்ஃபோர்ட் 22 ரன்களிலும், டாம் கரண் 21 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். பின்னர் வந்த வீரர்களாலும் ரன்களைச் சேர்க்க இயலவில்லை.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை மட்டுமே எடுத்தது. துபாய் கேப்பிட்டல்ஸ் தரப்பில் ஆடம் ஸாம்பா 3 விக்கெட்டுகளையும், ஜேக் பால் ஃபிரெட் கிளாசென் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை