ஐஎல்டி20: வின்ஸ், வைஸ் அபாரம்; கல்ஃப் ஜெயண்ட்ஸ் இமாலய வெற்றி!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் இன்டர்நேஷ்னல் லீக் என்றழைக்கப்படும் ஐஎல்டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் - கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஷார்ஜாவில் நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்றுள்ள துபாய் கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிக்கு கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய ரெஹான் அஹ்மத் 12 ரன்களிலும், கிறிஸ் லின் 25 ரன்களிலும், எராஸ்மஸ் 3 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேம்ஸ் வின்ஸ் அரைசதம் கடந்தார். அவருக்கு துணையாக விளையாடிய ஹெட்மையரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்த்தினர். பின் 4 சிக்சர், 4 பவுண்டரிகளை விளாசி 76 ரன்களைச் சேர்த்த ஜேம்ஸ் வின்ஸ் ஆட்டமிழந்தார்.
இறுதிவரை களத்தில் இருந்த ஷிம்ரான் ஹெட்மையர் 37 ரன்களைச் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்களைச் சேர்த்தது. துபாய் அணி தரப்பில் இசுரு உதானா, அகிஃப் ராஜா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய துபாய் கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. நட்சத்திர வீரர் ராபின் உத்தப்பா, சிராக் சூரி, ஜோ ரூட், தசுன் ஷனகா, யூசுப் பதான், ஃபேபியன் ஆலன், சமிகா கருணரத்னே என அதிரடி வீரர்கள் அனைவரும் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டி ஏமாற்றமளித்தனர்.
இதனால் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 14.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய டேவிட் வைஸ் 2 ஓவர்களில் 3 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அந்த அணியின் கிறிஸ் ஜோர்டனும் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் துபாய் கேப்பிட்டல்ஸை வீழ்த்தி இமாலய வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.