ஐஎல்டி20: டெஸர்ட் வைப்பர்ஸை வீழ்த்தி எம்ஐ எமிரேட்ஸ் அபார வெற்றி!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஐஎல்டி20 லீக் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 21ஆவது லீக் ஆட்டத்தில் எம்ஐ எமீரேட்ஸ் - டெஸர்ட் வைப்பர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற டெஸர்ட் வைப்பர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து களமிறங்கிய எம்ஐ எமிரேட்ஸ் அணிக்கு முகமது வசீம் - ஆண்ட்ரே ஃபிளெட்சர் இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தனர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் கடக்க அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. பின் அரைசதம் அடித்த கையோடு ஃபிளெட்சர் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
இதைத்தொடர்ந்து 86 ரன்கள் எடுத்திருந்த முகமது வாசீமும் தனது விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் பொல்லார்ட் அதிரடியாக விளையாடிய பொல்லார்ட் 19 பந்துகளில் 4 சிக்சர், 4 பவுண்டரிகள் என அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடுவில் எம்ஐ எமிரேட்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்களைச் சேர்த்தது.
அதன்பின் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய டெஸர்ட் வைப்பர்ஸ் அணியின் பேட்டர்களால் எதிரணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. அந்த அணியின் நட்சத்திர வீரர்களான அலெக்ஸ் ஹேல்ஸ், காலின் முன்ரோ, சாம் பில்லிங்ஸ், ரூதர்ஃபோர்ட் என அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் வந்த வீரர்களாலும் ரன்களைச் சேர்க்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். எம்ஐ எமிரேட்ஸ் தரப்பில் ஃபரூக்கி 3 விக்கெட்டுகளையும், ஸாஹுர் கான், இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்மூலம் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 12.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 84 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் எம்ஐ எமிரேட்ஸ் அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.