ஐஎல் டி20: ஷார்ஜா வாரியர்ஸை வீழ்த்தி எம்ஐ எமிரேட்ஸ் அபார வெற்றி!
ஐபிஎல் தொடரைப் பின்பற்றி ஐக்கிய அரபு அமீரகத்தில் இண்டர்னேஷ்னல் லீக் டி20 தொடர் இந்தாண்டு தொடங்கப்பட்டுள்ளது. நேற்று தொடங்கிய இத்தொடர் தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி வருகிறது. இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெறும் 2ஆவது லீக் ஆட்டத்தில் எம்ஐ எமிரேட்ஸ் - ஷார்ஜா வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஷார்ஜா வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய எம்ஐ எமிரேட்ஸ் அணியின் தொடக்க வீரர் வில் ஸ்மீட் 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஆண்ட்ரே ஃபிளெட்சரும் 22 ரன்களோடு விக்கெட்டை இழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த முகமது வாசீம் - நிக்கோலஸ் பூரன் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி மளமளவென ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் முகமது வாசீம் அரைசதம் கடந்து அசத்தினார். அதேசமயம் அரைசதத்தை நெருங்கிய பூரன் 49 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த நஜிபுல்லா ஸத்ரா ரன் ஏதுமின்றியும், முகமது வாசீம் 71 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். இறுதியில் கேப்டன் பொல்லார்ட் மற்றும் டுவைன் பிராவோ ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான ஸ்கோரை அடித்தனர்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் எம் ஐ எமீரெட்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்களைச் சேர்த்தது. இதில் ஆட்டமிழக்காமல் இருந்த பொல்லார்ட் 22 ரன்களையும், டுவைன் பிராவோ 21 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஷார்ஜா வாரியர்ஸ் அணியில் எவின் லூயிஸ், டேவிட் மாலன் ஆகியோர் அடுத்தடுத்து ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் மியீன் அலியும் 15 ரன்களோடு வெளியேற, பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மற்றொரு தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸும் 43 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய டாம் கோலர்-காட்மோர் 10, ஜோ டென்லி 9, முகமது நபி 3, ஜுனைத் சித்திக் 4 என வந்த வேகத்தில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இருப்பினும் எட்டாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய கிறிஸ் வோக்ஸ் எதைப்பற்றியும் கவலைப்படாமல் பவுண்டரிகளாக விளாசித் தள்ளினார்.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கிறிஸ் வோக்ஸ் அரைசதம் கடந்ததுடன், ஆட்டத்தின் கடைசிப் பந்துவரை களத்திலிருந்து 29 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 62 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களை மட்டுமே எடுத்தது.
எம்ஐ எமிரேட்ஸ் அணி தரப்பில் இம்ரான் தாஹிர் 3 விக்கெட்டுகளையும், பிராவோ, ஃபரூக்கி தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் எம்ஐ எமிரேட்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் ஷார்ஜா வாரியர்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.