ஐஎல்டி20 2025: ஷனகா அதிரடியில் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது கேப்பிட்டல்ஸ்!
ஐஎல்டி20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 16ஆவது லீக் போட்டியில் துபாய் கேப்பிட்டல்ஸ் மற்றும் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற துபாய் கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதைனையடுத்து களமிறங்கிய கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணியில் தொடக்க வீரர் இப்ராஹிம் ஸத்ரான் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ் - ஜோர்டன் காக்ஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஜேம்ஸ் வின்ஸ் 24 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த அல்சாபும் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் ஜோர்டனுடன் ஜோடி சேர்ந்த எராஸ்மஸ் ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஜோர்டன் காக்ஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த நிலையில், எராஸ்மஸ் 29 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து அரைசதம் கடந்து விளையாடி வந்த ஜோர்டன் காக்ஸும் 70 ரன்களுடன் பெவிலியன் திரும்ப, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷிம்ரான் ஹெட்மையர் 17 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்களைச் சேர்த்தது. கேப்பிட்டல்ஸ் தரப்பில் துஷ்மந்தா சமீரா, ஒபெத் மெக்காய், ஜாகிர் கான் மற்றும் குல்பதின் நைப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய துபாய் கேப்பிட்டல்ஸ் அணியில் ஷாய் ஹோப் ஒருபக்கம் பொறுப்புடன் விளையாட, மறுபக்கம் களமிறங்கிய பென் டங்க் 10 ரன்களுக்கும், கலித் ஷா 10 ரன்களுக்கும், குல்பதின் நைப்17 ரன்களுக்கும், நஜிபுல்லா ஸத்ரான் 7 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அவர்களைத் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷாய் ஹொப்பும் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 47 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
Also Read: Funding To Save Test Cricket
பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் சிக்கந்தர் ரஸா - தசுன் ஷனகா இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சிக்கந்தர் ரஸா 26 ரன்களையும், தசுன் ஷனகா 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 34 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் கல்ஃப் ஜெயண்ட்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் ஷாய் ஹோப் ஆட்டநாயகன் விருதை வென்றார்.