ஐஎல் 20: உத்தப்பா, பாவெல் அதிரடியில் துபாய் கெபிட்டல்ஸ் அபார வெற்றி!
ஐபிஎல் தொடரைப் பின்பற்றி தற்போது பல்வேறு நாடுகளும் டி20 லீக் தொடர்களை நடத்திவருகின்றன. அதன்படி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்டர்னேஷ்னல் லீக் டி20 தொடரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்தொடரின் முதல் சீசன் நேற்று துபாயில் தொடங்கியது.
அதன்படி தொடரின் முதல் போட்டியில் துபாய் கேப்பிட்டல்ஸ் - அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற அபுதாபி அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய துபாய் கேப்பிட்டல்ஸ் அணிக்கு ராபின் உத்தப்பா - ஜோ ரூட் இணை தொடக்கம் தந்தனர்.
இதில் ஜோ ரூட் 26 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ராபின் உத்தப்பா 33 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சர்கள் என மொத்தம் 43 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ராஜபக்ஷ 9 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் ரோவ்மன் பாவெல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 48 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய சிக்கந்தர் ரஸா 26 ரனளிலும் , யூசுப் பதான் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களைச் சேர்த்தது.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர் காலின் முன்ரோ 1, பிராண்டன் கிங் 8 என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் மற்றொரு தொடக்க வீரரான பால் ஸ்டிர்லிங் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்தினார்.
பின்னர் அவரும் 54 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய சுனில் நரைன், ஆண்ட்ரெ ரஸல், அகில் ஹொசைன் போன்ற நட்சத்திர வீரர்களும் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
இதன்மூலம் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்று அசத்தியுள்ளது.