ஐஎல்டி20: துபாய் கேப்பிட்டல்ஸ் அசத்தல் வெற்றி!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் முதல் சீசன் இன்டர்நேஷ்னல் லீக் டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 22ஆவது லீக் ஆட்டத்தில் அபுதாபி நைட் ரைடர்ஸ் - துபாய் கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற துபாய் கேப்பிட்டல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர் பால் ஸ்டிர்லிங் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பி ஏமாற்றமளித்தார். மற்றொரு தொடக்க வீரரான ஜோ கிளார்க் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். அதன்பின் 52 ரன்கள் எடுத்திருந்த ஜோ கிளார்க்கும் விக்கெட்டை இழந்தார்.
அதனைத்தொடர்ந்து களமிறங்கிய அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் தனஞ்செய டி சில்வா, பிராண்டன் கிங், சரித் அசலங்கா, அகீல் ஹொசைன், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களை மட்டுமே எடுத்தது. துபாய் அணி தரப்பில் ஆடம் ஸாம்பா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய துபாய் கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஜார்ஜ் முன்ஸி - நிரோஷன் டிக்வெல்லா ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் டிக்வெல்லா 37 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் இருந்த முன்ஸி அரைசதம் கடந்து அசத்தினார்.
அதன்பின் 57 ரன்களில் முன்ஸியும், 28 ரன்களில் தசுன் ஷனகாவும் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் வந்த கேப்டன் ரோவ்மன் பாவெல் அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 17.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 7 விக்கெட் வித்தியாசத்தில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.