கோலியின் ‘பயோபிக்’ திரைப்படத்தில் நடிக்க விருப்பம் - விஜய் தேவரகொண்டா!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சனிக்கிழமை முதல் ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்றப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பீல்டிங்கை முதலில் தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.
ஆனால் இந்திய அணி பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணி 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து ஆடிய இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்து, ஆசியக் கோப்பை லீக்கில் தனது முதல் வெற்றியை பதிவுசெய்தது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியைக் காண தென்னிந்தியாவின் பிரபல நடிகரான விஜய் தேவரகொண்டாவும் சென்றிருந்தார். போட்டியின்போது எந்த கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என்று, தெலுங்கு கிரிக்கெட் வர்ணனையாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர்களிடம் மிகவும் உற்சாகமாக பேசிய விஜய் தேவரகொண்டா, “தோனியின் பயோபிக் படத்தில் நடிக்க ஆசையாக உள்ளது. ஆனால் துரதிருஷ்டவசமாக சுஷாந்த் சிங் ராஜ்புட் நடிப்பில் அது ஏற்கனவே உருவாக்கப்பட்டுவிட்டது. அதனால் விரைவில் விராட் கோலியின் பயோபிக் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தெலுங்கு வர்ணணையாளர்களுக்கு பதிலளிக்கும்போது விராட் கோலியை அண்ணா என்றே, விஜய் தேவரகொண்டா அழைத்து வந்தார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.