மாஸ்டர்ஸ் லீக் 2025: இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதில் நுழைந்தது ஆஸ்திரேலியா!
இன்டர்நேஷ்னல் மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 15ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் மற்றும் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ராய்ப்பூரில் நடைபெற்ற இபோட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிக்கு கேப்டன் ஈயன் மோர்கன் - பில் மஸ்டர்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். அதன்பின் 17 ரன்களை மட்டுமே எடுத்திருந்த பில் மஸ்டர்ட் தனது இக்கெட்டை இழக்க, மறுமுனையில் ஈயன் மோர்கன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின்னர் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஈயன் மோர்கன் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 64 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டிம் ஆம்ப்ரோஸ் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 69 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய மேடி 29 ரன்களையும், டிம் பிரஸ்னன் 18 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் தரப்பில் ஜேம்ஸ் பெட்டின்சன், மெக்கெய்ன் மற்றும் ஸ்டீவ் ஓகீஃப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணிக்கு ஷான் மார்ஷ் - டேனியல் கிறிஸ்டியன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷான் மார்ஷ் 20 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் கிறிஸ்டியனுடன் இணைந்த நாதன் ரியர்டன் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்தனர். பின் 61 ரன்களில் கிறிஸ்டியன் விக்கெட்டை இழக்க, அதன்பின் 83 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நாதன் ரியர்டனும் விக்கெட்டை இழந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
அதன்பின் களமிறங்கிய வீரர்களில் பென் கட்டிங் 12 ரன்களையும், பீட்டர் நெவில் 28 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இருப்பினும் ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணியானது 19.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணி அரையிறுதிச்சுற்றுக்கும்ம் முன்னேறி அசத்தியுள்ளது.