மாஸ்டர்ஸ் லீக் 2025: மீண்டும் சதம் விளாசிய வாட்சன்; ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அபார வெற்றி!
இன்டர்நேஷ்னல் மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 11ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா மாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வதோதராவில் நடைபெற்ற இபோட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணிக்கு கேப்டன் ஷேன் வாட்சன் மற்றும் கல்லம் ஃபெர்குசன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இப்போட்டியில் இருவரும் தங்களுடைய அரைசதங்களை பூர்த்தி செய்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 186 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கல்லம் ஃபெர்குசன் 11 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 85 ரன்களைச் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தார்.
அதேசமய மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் ஷேன் வாட்சன் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இத்தொடரில் அவர் விளாசும் மூன்றாவது சதம் இதுவாகும். மேற்கொண்டு இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷேன் வாட்சன் தலா 9 பவுண்டரி, 9 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு 122 ரன்களையும், மறுமுனையில் பென் டங்க் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 34 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 260 ரன்களைக் குவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க மாஸ்டர்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் தொடக்க வீரர் ஹென்றி டேவிட்ஸ் ஒரு ரன்னுடன் பெவிலியன் திரும்ப, மற்றொரு தொடக்க வீரரான ஹாஷிம் ஆம்லா 7 பவுண்டரிகளுடன் 30 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ரிச்சர்ட் லெவி 22 ரன்களையும், அல்விரோ பீட்டர்சென் 28 ரன்களையும் சேர்த்த கையோடு விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ஜாண்டி ரோட்ஸ் 16 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர்.
Also Read: Funding To Save Test Cricket
இதனால் தென் ஆப்பிரிக்க மாஸ்டர்ஸ் அணி 17 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய பென் லாக்லின் 3 விக்கெட்டுகளையும், சேவியர் தோஹெர்டி, பிரைஸ் மெக்கெய்ன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க மாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.