என்னால் தினேஷ் கார்த்திக்கிற்கு எனது அணியில் இடம் கொடுக்க முடியாது - அஜய் ஜடேஜா!
ஆகஸ்ட் 27ஆம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் கேஎல் ராகுல், விராட் கோலி ஆகியோர் மீண்டும் இடம்பிடித்துள்ளனர்.
அதே போல் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், தீபக் ஹூடா, சாஹல், சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. அர்ஷ்தீப் சிங் போன்ற வீரர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது சரியானது தான் என்றாலும், சீனியர் வீரரான முகமது ஷமிக்கு இடம் கொடுக்காத இந்திய அணியின் முடிவு சமூக வலைதளங்களில் விமர்ச்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
முன்னாள் வீரர்கள் பலரும் முகமது ஷமிக்கு இடம் கொடுக்காதது தவறான முடிவு என ஓபனாக பேசி வருகின்றனர், அதே போல் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி குறித்தான தங்களது கருத்துக்களையும்க் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான அஜய் ஜடேஜா, முகமது ஷமிக்கு இடம் கொடுக்கப்படாததும், தினேஷ் கார்த்திக்கிற்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளதும் தவறான முடிவு என தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அஜய் ஜடேஜா, “முகமது ஷமிக்கு அணியில் இடம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். பேட்ஸ்மேன்களை விட பந்துவீச்சாளர்களுக்கே முதலில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். என்னை பொறுத்தவரையில் தினேஷ் கார்த்திக்கிற்கு தற்போது இந்திய அணியில் இடம் கொடுப்பது சரியான முடிவு அல்ல என்றே தோன்றுகிறது.
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி களத்தில் இருந்தால் தினேஷ் கார்த்திக்கிற்கு அணியில் வேலையே இல்லை. இது தோனியின் அணியாக இருந்திருந்தால் தினேஷ் கார்த்திக், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய மூவருக்கும் இடம் கிடைக்கும், ஆனால் தற்போதைய மாடர்ன் டே கிரிக்கெட்டில் தினேஷ் கார்த்திக் போன்றவருக்கு இடம் கொடுப்பது சரியான முடிவு அல்ல. தினேஷ் கார்த்திக் மிக சிறந்த கிரிக்கெட் வர்ணனையாளர், நானும் அவரும் ஒன்றாக தான் கமெண்ட்ரி செய்தோம், எனவே என்னால் எனது அணியில் அவருக்கு இடம் கொடுக்க முடியாது” என்று தெரிவித்தார்.