முச்சதத்தை இலக்காக வைத்து விளையாடினேன்;ஆனால், முடியவில்லை - இஷான் கிஷான்!

Updated: Sat, Dec 10 2022 22:49 IST
Image Source: Google

இந்தியா, வங்கதேசம் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், முதல் இரண்டு போட்டிகளில் வங்கதேசம் சிறப்பாக செயல்பட்டு 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது ஒருநாள் போட்டி தற்போது சட்டோகிராமில் நடைபெற்று வருகிறது.

முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ஓபனர் ஷிகர் தவன் 3 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து இஷான் கிஷன், விராட் கோலி இருவரும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க ஆரம்பித்தார்கள். பந்துகள் சரியான வேகத்தில் பேட்டிங்கு வந்ததாலும், ஸ்விங் இல்லாததாலும் வேகப்பந்து வீச்சாளர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 

இதனால், இஷான் கிஷன் இஸ்டத்திற்கு பேட்டை சுத்தி, மிரட்டலாக விளையாட ஆரம்பித்தார். கூடவே கோலியும் அதிரடி மோடில் இருந்ததால், ரன்கள் பறக்க ஆரம்பித்தது. இதனால், பௌலர்கள் அழுத்தங்களுடன் பந்துவீச வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. தவறான லைன், லெந்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துவீசினார்கள்.

குறிப்பாக, மைதானத்தில் பந்துகள் சரியாக சுழலவில்லை. சொல்லப்போனால், சுழலவே இல்லை என்பதுதான் உண்மை. இதனால், இஷான் கிஷன் இஸ்டத்திற்கு பேட்டை நீட்டி ரன்களைகுவிக்க ஆரம்பித்தார். இறுதியில் 126 பந்துகளில் 23 பவுண்டரி, 9 சிக்ஸர் உட்பட 200* ரன்களை குவித்து கிஷன், வரலாற்றில் இடம்பிடித்தார். 35 ஓவர்களிலேயே இவர் இரட்டை சதம் அடித்ததால், நிச்சயம் முச்சதம் அடித்து சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இறுதியில் 131 பந்துகளில் 210 ரன்களை சேர்த்து நடையைக் கட்டினார்.

அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணி 34 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளையும், அக்ஸர் படேல், உம்ரான் மாலிக் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர்.

இந்நிலையில் பெவிலியன் திரும்பிய இஷான் கிஷன், இரட்டை சதம் அடித்தது குறித்து பேட்டிகொடுத்தார். அதில், “இரட்டை சதம் அடித்தது, மகிழ்ச்சியாக இருக்கிறது. சச்சின், சேவாக், ரோஹித் போன்ற இரட்டை சதம் அடித்தவர்களுடன் எனது பெயரையும் சேர்த்து வைத்து பேசுவது அற்புதமான உணர்வை தருகிறது. இரட்டை சதம் அடித்தபிறகு 10-15 ஓவர்கள் மிச்சம் இருந்தது. இதனால், முச்சதத்தை இலக்காக வைத்து விளையாடினேன். ஆனால், முடியவில்லை.

நான் சிக்ஸர் மூலம் சதத்தை பூர்த்தி செய்ய விரும்பினேன். ஆனால், கோலி என்னிடம் வந்து 'இது உனக்கு முதல் சதம், சிங்கில்களாக எடுத்து விளையாடி, சதம் அடி' எனக் கூறினார். மேலும், எந்தெந்த பௌலர்களை டார்கெட் செய்து, எப்படி விளையாட வேண்டும் என்பதை, களத்தில் அடிக்கடி கூறி வந்தார். இப்போட்டி துவங்குவதற்கு முன் சூர்யகுமார் யாதவிடமும் ஆலோசனை கேட்டேன். பந்துகளை நன்றாக பார்த்தாலே சிறப்பாக விளையாட முடியும் எனக் கூறினார். அதன்படிதான் நான் விளையாடினேன்” எனத் தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை