NZ vs IND, 2nd T20I: சூர்யகுமார், ஹூடா அசத்தல்; இந்திய அணி அபார வெற்றி!
ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் அணி நியூசிலாந்துக்கு பயணித்து 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக இளம் அணியை உருவாக்கும் புதிய முயற்சியாக கருதப்படும் இத்தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2ஆவது போட்டி இன்று மவுண்ட் மாங்குனியில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு வித்தியாச முயற்சியாக தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரிஷப் பண்ட் 6 (13) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் மற்றொரு தொடக்க வீரர் இசான் கிசானும் 5 பவுண்டரி 1 சிக்ருடன் 36 (31) ரன்களில் தடுமாறி அவுட்டானார். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 13 (9) ரன்களில் நடையை கட்டினாலும் மறுபுறம் 3ஆவது இடத்தில் களமிறங்கிய சூரியகுமார் வழக்கம் போல களமிறங்கிய முதல் பந்திலிருந்தே 150 ஸ்ட்ரைக் ரேட்டில் அதிரடி சரவெடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.
அவரை கட்டுப்படுத்த கேப்டன் கேன் வில்லியம்சன் போட்ட அத்தனை திட்டங்களையும் தவிடு பொடியாக்கிய அவர் நியூசிலாந்து பவுலர்களுக்கு கொஞ்சமும் கருணை காட்டாமல் மைதானத்தில் நாலாபுறங்களிலும் சுழன்றடித்து ரசிகர்களை மகிழ்வித்து சதமடித்தார். ஆனால் மறுபுறம் அவரை வேடிக்கை பார்த்த கேப்டன் ஹர்திக் பாண்டியா கடைசி ஓவரில் 13 (13) ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்து வந்த தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை அடுத்தடுத்து கோல்டன் டக் அவுட்டாக்கிய டிம் சௌதீ ஹாட்ரிக் விக்கெட்களை சாய்த்தார்.
இருப்பினும் கடைசி வரை அவுட்டாகாமல் வெளுத்து வாங்கி சூரியகுமார் 11 பவுண்டரி 7 சிக்சருடன் 111 ரன்களை விளாசி இந்தியாவை 20 ஓவர்களில் 191/6 ரன்கள் எடுக்க உதவினார். நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக டிம் சவு 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அதைத்தொடர்ந்து 192 ரன்களை துரத்திய நியூசிலாந்துக்கு முதல் ஓவரிலேயே புவனேஸ்வர் குமாரிடம் ஃபின் ஆலன் அவுட்டாகி சென்றார். இருப்பினும் அடுத்து களமிறங்கிய கேப்டன் வில்லியம்சனுடன் கைகோர்த்த மற்றொரு தொடக்க வீரர் டேவோன் கான்வே 2வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போது 3 பவுண்டரியுடன் 25 ரன்களில் அவுட்டானார். அடுத்த ஓவரிலேயே அதிரடி வீரர் கிளென் பிலிப்ஸை 12 ரன்களில் சஹால் காலி செய்ததால் போட்டி இந்தியாவின் கட்டுக்குள் கொண்டு வந்தது. ஏனெனில் மிடில் ஓவர்களில் டேரில் மிட்சேல் 10 ஜேம்ஸ் நீசம் 0, மிட்சேல் சாட்னர் 2 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் துல்லியமான பந்து வீச்சில் அடுத்தடுத்த ஓவர்களில் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இருப்பினும் மறுபுறம் நங்கூரமாக நின்று போராடிய கேப்டன் கேன் வில்லியம்சன் 4 பவுண்டரி 2 சிக்சருடன் அரை சதமடித்து 61 ரன்கள் குவித்து கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்களும் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பியதால் 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து 126 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதனால் 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா சார்பில் அதிகபட்சமாக தீபக் ஹூடா 4 விக்கெட்டுகளையும் முகமது சிராஜ் மற்றும் சஹால் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் சாய்த்தனர்.