இத்தொடரின் மூலம் சில நல்ல விசயங்கள் நடந்துள்ளன - ரவி சாஸ்திரி!
நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடன் மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற பல சீனியர் வீரர்களுக்கு நியூசிலாந்து அணியுடனான இந்த தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டதால், இளம் வீரர்கள் பலருக்கு இந்த தொடரில் வாய்ப்பு கிடைத்தது.
தங்களது திறமையை வெளிப்படுத்தி கொள்ள இளம் வீரர்களுக்கு இந்த தொடர் நல்ல வாய்ப்பாகவே கருதப்பட்டது, ஆனால் டி20 தொடரில் சூர்யகுமார் யாதவையும், ஒருநாள் தொடரில் சுப்மன் கில்லையும் தவிர மற்றவர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இந்த தொடரில் செயல்படவில்லை.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சொதப்பியதன் காரணமாக இந்திய அணி ஒருநாள் தொடரை 1-0 என்ற கணக்கில் மோசமாக இழந்தது. ஒருநாள் தொடரில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சொதப்பிய இந்திய அணி கடும் விமர்ச்சனங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், நியூசிலாந்து அணியுடனான தொடரின் மூலம் இந்திய அணிக்கு நட்சந்த நல்ல விசயங்களை முன்னாள் இந்திய வீரரும், இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி சுட்டி காட்டியுள்ளார்.
இது குறித்து ரவி சாஸ்திரி பேசுகையில், “இந்தியா – நியூசிலாந்து இடையேயான ஒருநாள் தொடரின் மூலம் இந்திய அணிக்கு நிறைய நல்ல விசயங்கள் நடந்துள்ளதாக நான் கருதுகிறேன். ஸ்ரேயஸ் ஐயர் தனது பழைய ஆட்டத்திற்கு திரும்பிவிட்டார். அவரால் அதிரடியாகவும் விளையாட முடிகிறது, அணியின் தேவையை உணர்ந்து பொறுமையாக விளையாடவும் முடிகிறது. அதே போல் சூர்யகுமார் யாதவால் என்ன முடியும் என்பதும் இந்த தொடரின் மூலம் தெளிவாக தெரியவந்துள்ளது.
அதே போல் சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்களின் திறமையும் இந்த தொடரின் மூலம் தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரின் முடிவு வெறும் 2 போட்டிகளின் அடிப்படையில் மட்டுமே அமைந்துள்ளதால் இந்த தொடரின் முடிவை நான் பெரிதாக எடுத்து கொள்ள தேவை இல்லை, இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை அடுத்தடுத்த தொடர்களில் சரியாக பயன்படுத்தி, அவர்களை தயார்படுத்துவதே சரியானதாக இருக்கும்” என்று தெரிவித்தார்.