SA vs IND, 2nd Test: விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த புஜாரா, ரஹானே!
தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜோஹன்னஸ்பர்க் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 202 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து முதல் நாள் ஆட்டத்தின் கடைசி செஷனில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் நேற்றைய இரண்டாம் நாளின் கடைசி செஷனில் 229 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதன்பின் 27 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்களைச் சேர்த்திருந்தது.
இதையடுத்து 58 ரன்கள் முன்னிலையுடன் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணியில் புஜாரா - ரஹானே ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் அரைசதம் கடந்து தங்கள் மேல் இருந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தனர்.
அதன்பின் 53 ரன்களில் புஜாரா விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து 58 ரன்னில் ரஹானேவும் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய ரிஷப் பந்த் ரன் ஏதுமின்றியும், ரவிச்சந்திரன் அஸ்வின் 16 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இதனால் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணியில் ஹனுமா விஹாரி 6 ரன்களுடனும், ஷர்துல் தாக்கூர் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் காகிசோ ரபாடா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதையடுத்து 161 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடரவுள்ளது.