இந்திய அணியின் மிடில் ஆர்டர் மெய்சிலிர்க்க வைக்கிறது - ரோஹித் சர்மா!
இலங்கைக்கு எதிரான 2ஆவது போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று 20 ஓவர் தொடரை கைப்பற்றியது. தர்மசாலாவில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன் குவித்தது. இதனால் இந்தியாவுக்கு 184 ரன் இலக்காக இருந்தது.
பின்னர் விளையாடிய இந்திய அணி 17 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் 17.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 186 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதில் ஸ்ரேயாஸ் அய்யர் 44 பந்தில் 74 ரன்னும் (6 பவுண்டரி, 4 சிக்சர்), ஜடேஜா 18 பந்தில் 45 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர் ), சஞ்சு சாம்சன் 25 பந்தில் 39 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். இந்த வெற்றி மூலம் இந்திய அணி 20 ஓவர் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த வெற்றிக்காக பேட்ஸ்மேன்களை கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டி உள்ளார். மிடில் ஆர்டர் வரிசை மெய்சிலிர்க்க வைத்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “தொடக்க ஜோடி எளிதில் ஆட்டம் இழந்த பிறகு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்கள் பொறுப்பை ஏற்று ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து கொடுத்தது என்னை மெய்சிலிர்க்க வைத்தது.
அவர்களது பணி பாராட்டும் வகையில் இருந்தது. ஜடேஜாவும், ஸ்ரேயாஸ் அய்யரும் அபாரமான பேட்டிங் திறனை வெளிப்படுத்தினார்கள்.
கடைசி 5 ஓவர்களில் பந்து வீச்சாளர்கள் ரன்களை அதிகமாக விட்டு கொடுத்து விட்டனர். இதற்காக நான் அவர்களிடம் கடுமையாக நடந்துகொள்ள மாட்டேன்.ஏனென்றால் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்தது.
முதல் 15 ஓவர்களில் பந்துவீச்சு நன்றாக இருந்தது. கடைசியில்தான் ரன் போனது. ஆட்டத்தில் இதுமாதிரியும் நடக்கலாம்” என்று தெரிவித்தார்.