ஜடேஜா தான் டிக்ளர் செய்ய சொன்னார் - ரோஹித் சர்மா!

Updated: Mon, Mar 07 2022 10:16 IST
Image Source: Google

இலங்கைக்கு எதிராக மொஹாலியில் நடந்த முதல் டெஸ்ட்டில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 175 ரன்களையும், ரிஷப் பண்ட் 96 ரன்களையும், அஷ்வின் 61 ரன்களையும் குவித்தனர். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 174 ரன்களுக்கு சுருண்டது. ஃபாலோ ஆன் பெற்று 2வது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி, 2வது இன்னிங்ஸிலும் 178 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்திய அணியின் அபாரமான ஆட்டம், இலங்கை அணியின் மோசமான ஆட்டத்தால் மூன்றே நாட்களில் போட்டி முடிந்தது. 

இந்த போட்டியின் 2ஆம் நாள் ஆட்டத்தின் 2ஆம் செசன் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. ஆட்டத்தின் 2ஆம் நாள் தான் என்பதால், வலுவான நிலையில் மெகா ஸ்கோர் அடித்திருந்த இந்திய அணி இன்னும் தாமதமாகக்கூட டிக்ளேர் செய்திருக்கலாம். ஆனால் இரட்டை சதத்தை நெருங்கிக்கொண்டிருந்த ஜடேஜா 175 ரன்கள் அடித்திருந்தபோது கேப்டன் ரோஹித் சர்மா டிக்ளேர் செய்தது விவாதத்தை ஏற்படுத்தியது.

ஜடேஜாவை இரட்டை சதமடிக்க விட்டிருக்கலாம் என பலர் கருத்து கூறினர். இதையடுத்து 2ஆம் நாள் ஆட்ட முடிவில் அதுகுறித்து பேசிய ஜடேஜா, “எனக்கு ஓய்வறையிலிருந்து செய்தி அனுப்பப்பட்டது. நானும் ஆடுகளத்தின் தன்மை குறித்து ஓய்வறைக்கு செய்தி அனுப்பினேன். பந்து திரும்ப தொடங்கிவிட்டது, பவுன்ஸும் வித்தியாசமாக இருக்கிறது. ஆடுகளத்தின் தன்மை மாற தொடங்கிவிட்டது. 

மேலும் இலங்கை வீரர்கள் ஒன்றரை நாள் ஃபீல்டிங் செய்து சோர்ந்து போயிருப்பதால், இப்போது டிக்ளேர் செய்வது சரியாக இருக்கும். அவர்களாக பெரிய ஷாட்டுகளை ஆடமுடியாது. பிட்ச்சும் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டது. எனவே டிக்ளேர் செய்ய இதுதான் சரியான நேரம் என ஓய்வறைக்கு செய்தி அனுப்பினேன்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், போட்டி முடிந்த பின்னர் இதுகுறித்து பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, “இந்த போட்டியின் ஹைலைட்டே ஜடேஜா தான். டிக்ளேர் செய்வது குறித்து ஒரு கேள்வி இருந்தது. ஜடேஜா தான் கொஞ்சம் கூட சுயநலமில்லாமல், இன்னிங்ஸை டிக்ளேர் செய்ய சொன்னார்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை