IND vs AFG, 2nd T20I: குல்பதில் நைப் அரைசதம்; இந்திய அணிக்கு 173 டார்கெட்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியதுடன், தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி இன்று இந்தூரிலுள்ள ஹொல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் விராட் கோலி மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ளனர். இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - இப்ராஹிம் ஸத்ரான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக விளையாடிய ரஹ்மனுல்லா குர்பாஸ் 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான இப்ராஹிம் ஸத்ரான் 8 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கிய அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 2 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதேசமயம் இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய குல்பதின் நைப் தனது அரைசதத்தைப் பதிவுசெது அசத்தினார். அதன்பின் 5 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 57 ரன்கள் எடுத்திருந்த குல்பதின் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து நட்சத்திர வீரர் முகமது நபி 14 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இதனையடுத்து களமிறங்கிய நஜிபுல்லா ஸத்ரான் தனது பங்கிற்கு ஒரு பவுண்டரி, 2 சிக்சர்கள் என 23 ரன்களையும், கரிம் ஜானத் 20 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முஜீப் உர் ரஹ்மான் 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 21 ரன்களையும் எடுத்தனர். இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும், அக்ஸர் படேல், ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.