IND vs AUS, 1st T20I: மேத்யூ வேட்டின் இறுதிநேர அதிரடி; இந்தியாவை வீழ்த்தியது ஆஸி!

Updated: Wed, Sep 21 2022 09:12 IST
IND vs AUS 1st T20I: Matthew Wade's Cameo helps Australia beat India by 4 wickets (Image Source: Google)

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அடுத்த மாதம் டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்க உள்ள நிலையில் இரு அணிகளுக்கும் இந்த தொடர் சிறப்பானதொரு பயிற்சியாக இத்தொடர் அமைந்துள்ளது.

இந்த தொடரின் முதல் ஆட்டம் மொகாலியில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதனால் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் கேஎல்ராகுல் இந்தியாவுக்காக ஆட்டத்தை தொடங்கினர். ரோகித், 11 ரன்கள் எடுத்து வெளியேற, அவரைத் தொடர்ந்து வந்த கோலி 2 ரன்களில் வெளியேறினார்.

பின்னர் மூன்றாவது விக்கெட்டுக்கு இணைந்த ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவும் 68 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ராகுல் 55 ரன்கள் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து களத்திற்கு பாண்டியா வந்தார். சூர்யகுமார் யாதவ், 46 ரன்கள் எடுத்து அவுட்டானார். அக்சர் படேல் மற்றும் தினேஷ் கார்த்திக் தலா 6 ரன்கள் எடுத்து வெளியேறினர்.

ஆஸ்திரேலிய அணி சார்பில் நாதன் எல்லிஸ் 3, ஹேசல்வுட் 2 மற்றும் கேமரூன் கிரீன் 1 விக்கெட்டும் கைப்பற்றி இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. ஹர்திக், 30 பந்துகளில் 71 ரன்கள் எடுத்திருந்தார். 7 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் இதில் அடங்கும். அதிலும் கடைசி ஓவரின் கடைசி 3 பந்துகளில் ஹர்திக் பாண்டியா சிக்ஸர் விளாசி இன்னிங்ஸை முடித்தார்.

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரோன் ஃபிஞ்ச் - காமரூன் க்ரீன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஃபிஞ்ச் 22 ரன்கள் எடுத்த நிலையில் அக்ஸர் படேல் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 

பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் - காமரூன் க்ரீன் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் க்ரீன் அரைசதம் கடந்து அசத்தினார். 

மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித் 35 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 61 ரன்கள் எடுத்திருந்த க்ரீனும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்டி ஏமாற்றமளித்தனர். 

பின்னர் ஜோடி சேர்ந்த மேத்யூ வேட் - டிம் டேவிட் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிக்ஸரும், பவுண்டரியுமாக விளாசி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். அதிலும் ஹர்ஷல் படேல் வீசிய 18ஆவது ஓவரில் அடுத்தடுத்து 3 சிக்சர்களை விளாசி மிரளவைத்தனர். 

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. அந்த அணியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மேத்யூ வேட் 21 பந்துகளில் 45 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் அக்ஸர் படேல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை