IND vs AUS, 1st Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய ஜடேஜா!
பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூர் மைதானத்தில் இன்று இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இந்திய அணி தரப்பில் கே எஸ் பரத் மற்றும் சூரியகுமார் அறிமுகமானார்கள். ஆஸ்திரேலியா தரப்பில் டாட் மர்பி அறிமுகமானார்.
சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா இருவரையும் மூன்றாவது ஓவரிலேயே வெளியே அனுப்பினார்கள். இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த லபுசாக்னே மற்றும் ஸ்மித் இருவரும் மிகப் பொறுப்பாகவும் திறமையாகவும் விளையாடி 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவிலிருந்து வேலை அணியை காப்பாற்றி மதிய உணவு இடைவேளை வரை விக்கட் இல்லாமல் காப்பாற்றினார்கள்.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு திரும்பிய ஆஸ்திரேலியா அணி அதே ஆட்டத்தை தொடர்ந்தது. இந்த நிலையில் ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சில் இறங்கி வந்து விளையாட முயற்சி செய்த லபுசாக்னே, கே எஸ் பரத்தால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். அதற்கு அடுத்து வந்த ரென்ஷா தான் சந்தித்த முதல் பந்திலேயே ரவீந்திர ஜடேஜாவிடம் எல்.பி.டபிள்யு ஆகி வெளியேறினார்.
இதற்கு அடுத்து உச்சகட்டமாக மிகச் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ஸ்டீவ் ஸ்மித்தை அழகாக ஏமாற்றி கிளீன் போல்ட் செய்து வெளியேற்றினார் ரவீந்திர ஜடேஜா. அடுத்தடுத்து மூன்று செக் வைத்து ஆஸ்திரேலியா அணியை சரித்து இந்திய அணியை முன்னிலை பெற வைத்திருக்கிறார். தற்பொழுது ஆஸ்திரேலியா அணி ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்திருக்கிறது.