IND vs AUS, 4th T20I: மீண்டும் போராடி தோற்ற இந்தியா; தொடரை வென்றது ஆஸ்திரேலியா!

Updated: Sat, Dec 17 2022 22:57 IST
Image Source: Google

ஆஸ்திரேலிய மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போடிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரை இதுவரை நடந்த முடிந்த முதல் 3 போட்டிகளின் முடிவில் 2-1 என ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகித்த நிலையில், 4ஆவது டி20 போட்டி இன்று நடந்தது. 

இதில் தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும், தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணியும் மோதின. மும்பையிலுள்ள பிர்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனையும் கேப்டனுமான அலைஸா ஹீலி 21 பந்தில் 30 ரன்கள் அடித்து ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் களத்திலிருந்து வெளியேறினார். அதன்பின் முதல் 2 போட்டிகளில் 80 ரன்களுக்கும் மேல் குவித்த பெத் மூனி இந்த போட்டியில் 10 பந்தில் 2 ரன் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். மற்றொரு நட்சத்திர வீராங்கனையான தஹிலா மெக்ராத்தும் 9 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் ஜோடி சேர்ந்த எல்லி பெர்ரி - கார்ட்னெர் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இத்ஜில் கார்ட்னர் 27 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 49 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய எல்லிஸ் பெர்ரி அரைசதம் அடித்தார்.

இதில் பெர்ரி 42 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 72 ரன்களையும், கிரேஸ் ஹாரிஸ் அடித்து விளையாடி 12 பந்தில் 27 ரன்களும் அடிக்க, 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களை குவித்தது. இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன்பின் 189 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனைகள் ஸ்மிரிதி மந்தனா 16 ரன்களிலும்,ஷஃபாலி வர்மா 20 ரன்களிலும் என இருவருமே ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, ஜெமிமா ரோட்ரிக்ஸும் 8 ரன்னுக்கு நடையை கட்டினார். 

பின்னர் களமிறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் அதிரடியாக விளையாடி 46 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, இறுதியில்  ரிச்சா கோஷ் காட்டடி அடித்து 19 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 40 ரன்கள் அடித்தார். இதனால் கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. ஆனால் அதனை இந்திய வீராங்கனைகளால் எட்ட முடியவில்லை.

இதனால் இந்திய மகளி அணி 20 ஓவரில் 181 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணியிடம் மீண்டும் போராடி தோல்வியைத் தழுவியது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலிய மகளிர் அணி 3-1 என வென்று அசத்தியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை