மூன்றாண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் விளாசினார் விராட் கோலி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 289 ரன்கள் குவித்திருந்தது. விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா நான்காம் நாள் ஆட்டத்தைத் தொடங்கினர்.
ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ரவீந்திர ஜடேஜா 28 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, விராட் கோலியுடன் ஸ்ரீகர் பரத் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி இந்திய அணியின் ஸ்கோரினை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய விராட் கோலி டெஸ்டில் தனது 28ஆவது சதத்தினை அடித்து அசத்தினார். அவர் 243 பந்துகளில் 100 ரன்கள் குவித்தார். அனைத்து வடிவிலான போட்டிகளில் விராட் கோலியின் 75ஆவது சதம் இதுவாகும்.
மேலும் இவர் 1206 நாள்கள் மற்றும் 42 இன்னிங்ஸ்களுக்கு பிறகு விராட் கோலி தனது முதல் சர்வதேச டெஸ்ட் சதத்தைப் பதிவுசெய்து ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்துள்ளார்.