IND vs BAN, 2nd T20I: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்திய அணி!
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப்பெற்றிருந்தது.
இந்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இவ்விரு அணிகளுக்கு இடையேயன இரண்டாவது டி20 போட்டியானது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ முதலில் பந்துவீசுவதாக அறிவித்ததுடன் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய சஞ்சு சாம்சன் 10 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து அபிஷேக் சர்மா 15 ரன்களுக்கும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 8 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் இந்திய அணி 41 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த நிதீஷ் ரெட்டி மற்றும் ரிங்கு சிங் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். ஒருகட்டத்திற்கு மேல் இருவரும் இணைந்து அடுத்தடுத்து பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்கவிட அணியின் ஸ்கோரும் மின்னல் வேகத்தில் உயரத்தொடங்கியது.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதீஷ் குமார் ரெட்டி 27 பந்துகளில் தனது முதல் சர்வதேச டி20 அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அத்துடன் நிற்காத அவர் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய நிலையில், 4 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 74 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிங்கு சிங் 26 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்திருந்த நிலையில், 5 பவுண்டரி 3 சிக்ஸர்கள் என 53 ரன்களைச் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா வழக்கம்போல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் களமிறங்கிய ரியான் பராக் தனது பங்கிற்கு 2 சிக்சர்களை பறக்கவிட்ட கையோடு 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 32 ரன்களை எடுத்த நிலையில் ஹர்த்திக்கும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறினர். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்களைச் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டுகளையும், தஸ்கின் அஹ்மத், முஷ்தஃபிசூர் ரஹ்மான், தன்ஸிம் ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ் மற்றும் பர்வேஸ் ஹொசைன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய பர்வேஸ் ஹொசைன் 16 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோவும் 11 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இவர்களைத் தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த லிட்டன் தாஸ் 14 ரன்களுக்கும், தாவ்ஹித் ஹிரிடோய் 2 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
அதன்பின் இணைந்த அனுபவ வீரர் மஹ்முதுல்லா மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் மெஹிதி ஹசன் 16 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜக்கார் அலி ஒரு ரன்னிலும், ரிஷாத் ஹொசைன் 9 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இப்போட்டியில் இறுதிவரை களத்தில் இருந்த மஹ்முதுல்லா அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 சிக்ஸர்களுடன் 41 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
Also Read: Funding To Save Test Cricket
இதனால் வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய நிதீஷ் ரெட்டி மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், வாஷிங்டன் சுந்தர், ரியான் பராக், அபிஷேக் சர்மா மற்றும் மயங்க் யாதவ் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.