BAN vs IND, 2nd Test: தொடக்கத்தில் தடுமாறும் வங்கதேசம்; அதிரடி காட்டும் ஷாகில் அல் ஹசன்!
வங்கதேசத்தில் மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது 2 போட்டிகள் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், கடந்த 14 ஆம் தேதி முதல் சட்டோகிராமில் உள்ள ஜாஹூர் அகமது ஸ்டேடியத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டாக்கா அருகே உள்ள மிர்புரில் இன்று முதல் நடக்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்ட நிலையில், டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது.இந்திய அணியில் குல்தீப் யாதவுக்கு மாற்றாக ஜெய்தேவ் உனத்கட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து வங்கதேச அணியில் தொடக்க வீரர்களாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ – ஜாகிர் ஹசன் ஜோடி களமிறங்கிய நிலையில், ஜெய்தேவ் உனத்கட் வீசிய 14.5 வது ஓவரில் ஜாகிர் ஹசன் 15 ரன்கள் எடுத்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவருடன் மறுமுனையில் இருந்த நஜ்முல் ஹொசைன் சாண்டோ அஸ்வினின் சுழலில் சிக்கி 24 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ஷாகிப் அல் ஹசன் - மொமினுல் ஹக் இணை விக்கெட் இழப்பை தடுத்தனர். இதில் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இதன்மூலம் முதல் நாள் உணவு இடைவேளையின் போது வங்கதேச அணி 2 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்களைச் சேர்த்துள்ளது.
வங்கதேச தரப்பில் ஷாகிப் அல் ஹசன் 16 ரன்களிலும், மொமினுல் ஹக் 23 ரன்களிலும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் ஜெய்தேவ் உனாத்கட், ரவிச்சந்திரன் அஸ்வின் தனா ஒரு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.