IND vs BAN, Asia Cup 2023: ஷாகிப், ஹிரிடோய் அபாரம்; இந்தியாவுக்கு சவாலான இலக்கு!

Updated: Fri, Sep 15 2023 18:43 IST
Image Source: Google

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் சுற்றிலிருந்து இருந்து இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. இதில் இந்திய மற்றும் இறுதிப்போட்டிகளுக்கான வாய்ப்பை உறுதிசெய்துள்ளன.

இந்நிலையில் சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டியில் இன்று இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கொழும்புவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீரர் திலக் வர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

அதேசமயம் முன்னணி வீரர்களான விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, முகமது சிராஜ், ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு பிரஷித் கிருஷ்னா, முகமது ஷமி, சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் லிட்டன் தாஸ் ரன்கள் ஏதுமின்றியும், தன்ஸித் ஹசன் 13 ரன்களிலும், அனாமுல் ஹக் 4 ரன்களுக்கும், மெஹிதி ஹசன் மிராஸ் 14 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் வங்கதேச அணி 59 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். 

இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ஷாகிப் அல் ஹசன் - தாஹித் ஹிரிடோய் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். ஒரு கட்டத்திற்கு மேல் பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசிய இந்த இணை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். 

இதில் அரைசதம் கடந்திருந்த ஷாகிப் அல் ஹசன் 6 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 80 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 5 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 52 ரன்களைச் சேர்த்திருந்த தாஹித் ஹிரிடோயும் விக்கெட்டை இழந்தார். இறுதியில் நசும் அஹ்மது - மெஹிதி ஹசன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நசும் அஹ்மத் 6 பவுண்டரி, ஒரு சிக்சர் என 44 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மெஹிதி ஹசன் 29 ரன்களையும், தான்சிம் ஹசன் ஷாகிப் 14 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::