காயமடைந்து வெளியேறிய ஹர்திக் பாண்டியா; ஓவரை முடித்த விராட் கோலி!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக அரங்கேறி வருகிறது. இதில் இன்று நடைபெறும் 17ஆவது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணியும் புனேவில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இன்றைய போட்டிக்கான வங்கதேச அணியில் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் காயம் காரணமாக விளையாடவில்லை. அதேசமயம் இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு தன்ஸித் ஹசன் - லிட்டன் தாஸ் இணை தொடக்கத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், அதன்பின் அதிரடையாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். அப்போது ஆட்டத்தின் 9ஆவது ஓவரை வீச இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்த்திகி பாண்டியா வந்தார்.
அந்த ஓவரில் முதல் மூன்று பந்துகளில் லிட்டன் தாஸ் 2 பவுண்ட்ரிகளை விளாசினார். இதில் அந்த ஓவரின் மூன்றாவது பந்தின் போது லிட்டன் அடித்த பந்ததை ஹர்திக் பாண்டியா தடுக்க முயன்று நிலைதடுமாறி கீழே விழுந்து கயமடைந்தார். இதையடுத்து உடனடியாக களத்திற்கு வந்த அணி மருத்துவர்கள் அவரை ஓய்வரைக்கு அழைத்துச்சென்றனர்.
இதனால் அந்த ஓவரின் கடைசி மூன்று பந்துகளை இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பந்துவீசி அந்த ஓவரை முடிவுக்கு கொண்டுவந்தார். இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவின் காயம் இந்திய அணிக்கு கடும் பின்னடவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.