BAN vs IND, 2nd Test: சரிவை சமாளித்த லிட்டன் தாஸ்; அக்ஸர் படேல் அசத்தல்!

Updated: Sat, Dec 24 2022 14:11 IST
IND vs BAN: India Edging Towards Win Despite Bangladesh Fightback; Hosts Score 195/7 At Tea On Day 3 (Image Source: Google)

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேச நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இதில் இந்திய அணி 100 ரன்கள் எடுப்பதற்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா. கேப்டன் கேஎல்ராகுல், கில், புஜாரா, கோலி ஆகியோர் வரிசையாக அவுட் ஆகி இருந்தனர். பின்னர் வந்த பந்த், ஸ்ரேயஸ் ஐயருடன் இணைந்து 159 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார். மொத்தம் 105 பந்துகளை எதிர்கொண்டு 93 ரன்கள் குவித்தார். 

மறுமுனையில் ஸ்ரேயாஸ் ஐயராவது சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் 105 பந்துகளில் 2 சிக்சர், 10 பவுண்டரிகளுடன் 87 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஸர் படேல் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த டெய்ல் எண்டர்களும் வந்த வேகத்தில் நடையைக் கட்டினர். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தும் 314 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச தரப்பில் ஷாகிப் அல் ஹசன், தைஜுல் ஹசன் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து 87 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 7 ரன்களை எடுத்தது. அதன்பின் இன்று 80 ரன்கள் பின் தங்கிய நிலையில் அந்த அணி மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.

இதில் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 5 ரன்களோடு பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த மொமினுல் ஹக் 5, கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 13, முஷ்பிக்கூர் ரஹ்மான் 9 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் மற்றொரு தொடக்க வீரரான ஸாகிர் ஹசன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த கையோடு 51 ரன்களில் விக்கெட்டை இழந்தர். அவரைத் தொடர்ந்து வந்த மெஹிதி ஹசனும் ரன் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க அந்த அணி தடுமாறியது.

பின்னர் ஜோடி சேர்ந்த லிட்டன் தாஸ் - நூருல் ஹசன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நூருல் ஹசன் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் இருந்த லிட்டன் தாஸ் அரைசதம் கடந்தார். இதனால் 3ஆம் நாள் தேநீர் இடைவேளையின் போது வங்கதேச அணி 7 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்களைச் சேர்த்துள்ளது.

இதில் லிட்டன் தாஸ் 58 ரன்களுடனும், டஸ்கின் அஹ்மத் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் அக்ஸர் படேல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதையடுத்து 112 ரன்கள் முன்னிலையுடன் வங்கதேச அணி இன்னிங்ஸைத் தொடரவுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை