IND vs ENG, 1st T20I: சிக்ஸர் மழை பொழிந்த அபிஷேக்; இங்கிலாந்தை பந்தாடியது இந்தியா!

Updated: Wed, Jan 22 2025 22:06 IST
Image Source: Google

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இன்று (ஜனவரி 22) முதல் தொடங்கியது.  கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பில் சால்ட் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜோஸ் பட்லர் ஒருபக்கம் அபாரமாக விளையாடி ஸ்கோரை உயர்த்திய நிலையில், மற்றொரு தொடக்க வீரர் பென் டக்கெட்டும் 4 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். பின்னர் பட்லருடன் இணைந்த ஹாரி ப்ரூக் ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். 

இருவரும் இணைந்து 48 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அதிரடியாக விளையாட முயற்சித்த ஹாரி புரூக் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 17 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர ஆல் ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டோன் இரண்டாவது பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றைத்தைக் கொடுக்க, அடுத்து களமிறங்கிய ஜேக்கப் பெத்தெல் 7 ரன்களுக்கும், ஜேமி ஓவர்டன் 2 ரன்களுக்கும், கஸ் அட்கின்சன் 2 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த கேப்டன் ஜோஸ் பட்லர் அரைசதம் கடந்து அணியை சரிவிலிருந்து மீட்க, 8 பவுண்டரி, 2 சிக்ஸர் என 68 ரன்களில் அவரும் ஆட்டமிழந்தார். இறுதியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 12 ரன்களில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்ஸர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடியதுடன், ஒரே ஓவரில் 22 ரன்களை விளாசி அணிக்கு தேவையான தொடக்கத்தைக் கொடுத்தார். அதன்பின் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 26 ரன்களைச் சேர்த்த நிலையில் சஞ்சு சாம்சன் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் ரன்கள் ஏதுமின்றி ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

அதன்பின் ஜோடி சேர்ந்த அபிஷேக் சர்மா - திலக் வர்மா இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். இதில் ஒருகட்டத்திற்கு மேல் அதிரடியாக விளையாட தொடங்கிய அபிஷேக் சர்மா அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்டதுடன் 20 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அத்துடன் நிற்காத அபிஷேக் சர்மா 33 பந்துகளில் 5 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் என 79 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த திலக் வர்மா 19 ரன்களை எடுத்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். 

Also Read: Funding To Save Test Cricket

இதன்மூலம் இந்திய அணி 12.5 ஓவர்களிலேயே வெற்றியை இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியையும் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுபெற்றுள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி ஜனவரி 25ஆம் தேதி சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை