IND vs ENG, 1st Test: பாஸ்பாலை கையிலெடுத்த இங்கிலாந்து; முட்டுக்கட்டை போடும் அஸ்வின், ஜடேஜா!

Updated: Thu, Jan 25 2024 11:51 IST
IND vs ENG, 1st Test: பாஸ்பாலை கையிலெடுத்த இங்கிலாந்து; முட்டுக்கட்டை போடும் அஸ்வின், ஜடேஜா! (Image Source: Google)

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று தொடங்கியது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இப்போட்டிக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத், சுழற்பந்துவீச்சாளர் அக்ஸர் படேலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. 

இதையடுத்து இங்கிலாந்து தரப்பில் இன்னிங்ஸைத் தொடங்க பென் டக்கெட் - ஸாக் கிரௌலி இணை களமிறங்கியது. ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி இந்திய பந்துவீச்சாளர்களை தடுமாறச்செய்தனர். இதனால் முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழக்காமல் விளையாடிய இந்த இணை முதல் விக்கெட்டிற்கு 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. 

அதன்பின் அதிரடியாக விளையாடிய பென் டக்கெட் 35 ரன்கள் எடுத்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் சுழலில் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஒல்லி போப் ஒரு ரன்னில் ரவீந்திர ஜடேஜாவிடம் வீழ்ந்தார். அதனைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் ஸாக் கிரௌலி 20 ரன்கள் எடுத்த நிலையில் சிராஜின் அபாரமான கேட்ச்சால் அஸ்வின் பந்துக்கு விக்கெட்டை இழந்தார்.

இதனால் இங்கிலாந்து அணி 60 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த ஜோ ரூட் - ஜானி பேர்ஸ்டோவ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தி வருகின்றனர். இதன்மூலம் முதல்நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்களைச் சேர்த்துள்ளது. 

இங்கிலாந்து அணி தரப்பில் ஜோ ரூட் 18 ரன்களையும், ஜானி பேர்ஸ்டோவ் 32 ரன்களையும் சேர்த்து களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை