IND vs ENG, 2nd T20I: பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்சமயம் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.இதனையடுத்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று (ஜனவரி 25) சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பில் சால்ட் 4 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 3 ரன்களில் பென் டக்கெட்டும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ஜோஸ் பட்லர் மற்றும் ஹாரி புரூக் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர்.
இதில் அதிரடியாக விளையாட முயன்ற ஹாரி ப்ரூக் 13 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோஸ் பட்லர் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 45 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டோன் 13 ரன்னிலும், ஜேமி ஓவர்டன் 5 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த ஜேமி ஸ்மித் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 22 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அபாரமாக விளையாடி வந்த பிரைடன் கார்ஸ் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 31 ரன்களில் தேவையில்லாமல் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.
இறுதியில் ஜோடி சேர்ந்த ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஆதில் ரஷித் இருவரும் இணைந்து 20 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க, இங்கிலாந்து அணியும் 150 ரன்களைக் கடந்தது. அதன்பின் ஆதில் ரஷித் 10 ரன்னில் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோஃப்ரா ஆர்ச்சர் 12 ரன்களையும், மார்க் வுட் 5 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி மற்றும் அக்ஸர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்த நிலையில், 12 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் சஞ்சு சாம்சனும் 5 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் ஜோடி சேர்ந்த திலக் வர்மா மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்ந்தது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 12 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
ஒருபக்கம் திலக் வர்மா பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுமுனையில் விளையாடிய துருவ் ஜூரெல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இந்திய அணி 78 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் திலக் வர்மாவுடன் இணைந்த வாஷிங்டன் சுந்தரும் அதிரடியாக விளையாடிய நிலையில் அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்த்தொடங்கியது. இதில் பொறுப்புடன் விளையாடி வந்த திலக் வர்மா தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
அதேசமயம் மறுமுனையில் 26 ரன்களை எடுத்திருந்த கையோடு வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய அக்ஸர் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி மூன்று ஓவர்களில் கைவசம் இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே இருந்த நிலையில் வெற்றிக்கு 20 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அதன்பின் களமிறங்கிய ரவி பிஷ்னோய் 2 பவுண்டரிகளை விளாச, கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றிக்கு 6 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை உருவானது.
Also Read: Funding To Save Test Cricket
இங்கிலாந்து தரப்பில் கடைசி ஓவரை ஜேமி ஓவர்டன் வீசிய நிலையில், அந்த ஓவரை எதிர்கொண்ட திலக் வர்மா பவுண்டரி விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த திலக் வர்மா 4 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 72 ரன்களைச் சேர்த்திருந்தார். இதன்மூலம் இந்திய அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.