IND vs ENG: வாழ்வா சாவா ஆட்டத்தில் தொடரை வெல்வது யார்?
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி நாளை
(மார்ச் 28) நடைபெற உள்ளது. இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய
அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில்
வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகள்
இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.
இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடரையே தீர்மானிக்கும் மிக முக்கிய போட்டியான
இந்த போட்டிக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.
இந்த போட்டிக்கான இந்திய அணியை பொறுத்தவரையில் நிச்சயம் ஒரு சில மாற்றங்கள்
இருக்கும் என்றே தெரிகிறது. குறிப்பாக இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரன்களை வாரி
வழங்கிய குர்ணால் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு கடைசி போட்டிக்கான இந்திய
அணியில் இடம் கிடைக்க வாய்ப்பே இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
குல்தீப் யாதவின் இடத்தில் யுஸ்வேந்திர சாஹலுக்கும், குர்ணால் பாண்டியாவின் இடத்தில்
தமிழ்நாடு வீரர் வாஷிங்டன் சுந்தருக்கும் இடம் கிடைக்கலாம் என தெரிகிறது.
அதேசமயம் இந்திய பேட்ஸ்மேன்கள் தங்களது வேலையை சரியாக செய்து வருவதால் பேட்டிங்
ஆர்டரில் எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது. இதனால் சூர்யகுமார் யாதவிற்கு கடைசி
போட்டியிலும் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே.
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை கடைசி போட்டியில் மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளது.
அதிலும் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டாவ் அதிரடியான ஆட்டத்தை
வெளிப்படுத்தி வருக்கின்றன. அவர்களுடன் ஸ்டோக்ஸ், பட்லர், மொயின் அலி என அதிரடி
வீரர்கள் அணியில் இருப்பதால் இப்போட்டியில் வானவேடிக்கைகளுக்கு பஞ்சமிருக்காது.
பந்துவீச்சிலும் இங்கிலாந்து அணி மார்க் வுட், சாம் கரண், அதில் ரஷீத் என மிரட்டி வருவதால்
இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்:
ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, கே.எல் ராகுல், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா,
வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், புவனேஷ்வர் குமார், பிரஷித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர
சாஹல்.