IND vs ENG, 5th T20I: பந்துவீச்சாளர்கள் அபாரம்; இங்கிலாந்தை பந்தாடியது இந்தியா!
இங்கிலாந்து அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த நான்கு போட்டிகளில் இந்திய அணி மூன்று போட்டிகளில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 3-1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியுள்ளது. இந்நிலையில் இத்தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (பிப்ரவரி 01) மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இன்னிங்ஸின் முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசி அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன் முதல் ஓவரிலேயே 2 சிக்ஸர்கள் ஒரு பவுண்டரி என 16 ரன்களைச் சேர்த்தார். இதனால் இப்போட்டியில் சஞ்சு சாம்சன் ஃபார்முக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்கொண்ட 7ஆவது பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த அபிஷேக் சர்மா மற்றும் திலக் வர்மா இணை வழக்கம் போல் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா 17 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். ஆனால் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த திலக் வர்மா 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 24 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 2 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தொடர்ந்து சிக்ஸர் மழை பொழிந்த அபிஷேக் சர்மா 37 பந்துகளில் தனது இரண்டாவது சர்வதேச டி20 சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மறுபக்கம் அவருடன் இணைந்த ஷிவம் தூபேவும் தனது பங்கிற்கு 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 30 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா மற்றும் ரிங்கு சிங் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த அபிஷேக் சர்மா 7 பவுண்டரி, 13 சிக்ஸர்கள் என 135 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 247 ரன்களைச் சேர்த்துள்ளது. இங்கிலாந்து அணி தரப்பில் பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகளையும், மார்க் வுட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான பென் டக்கெட் முதல் பந்திலேயே விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஜோஸ் பட்லரும் 7 ரன்களுடன் நடையைக் கட்டினார்.
அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய ஹாரி புரூக் 2 ரன்களுக்கும், லியாம் லிவிங்ஸ்டோன் 9 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பில் சால்ட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 55 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பில் சால்டும் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ஜேக்கப் பெத்தெல் 10 ரன்களுக்கும், பிரைடன் கார்ஸ் 3 ரன்களுக்கும், ஜேமி ஓவர்டன், ஆதில் ரஷித், மார்க் வுட் ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
Also Read: Funding To Save Test Cricket
இதனால் இங்கிலாந்து அணி 10.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 97 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், வருண் சக்ரவர்த்தி, அபிஷேக் சர்மா மற்றும் ஷிவம் தூபே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.