IND vs ENG: கோலி, அசாம் சாதனையை தகர்த்த மாலன்!
இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 கிரிக்கெட் போட்டி நேற்று அகமதாபாத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோஹித் சர்மா, விராட் கோலியின் அதிரடியான ஆட்டத்தால் 225 ரன்களை இங்கிலாந்து அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.
அதன்பின் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 36 ரன்களில் போட்டியை வெற்றிபெற்றதோடு, டி20 தொடரை 3-2 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.
இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் டேவிட் மாலன் 65 ரன்களைச் சேர்த்த போது சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த போட்டிகளில் ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
முன்னதாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 26 போட்டிகளில் ஆயிரம் ரன்களைக் கடந்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்தது. அதனைத் தற்போது டேவிட் மாலன் 24 போட்டிகளில் முறியடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்காக விளையாடிவரும் டேவிட் மாலன், 24 டி போட்டிகளில் 1003 ரன்களைச் சேர்த்துள்ளார். மேலும் ஐசிசியின் டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலிலும் முதலிடத்தில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.