IND vs NZ, 1st T20I: உலகக்கோப்பை தோல்விக்கு பழிதீர்த்த இந்தியா!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி மார்ட்டின் கப்தில், மார்க் சாப்மன் ஆகியோரின் அதிரடியான அரைசதத்தினால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக மார்ட்டின் கப்தில் 70 ரன்களையும், மார்க் சாப்மன் 63 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார், ரவிச்சந்திரன் அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை துரத்திய இந்திய அணிக்கு கேஎல் ராகுல் - ரோஹித் சர்மா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் கேஎல் ராகுல் 15 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மா - சூர்யகுமார் யாதவ் இணை அதிரடியாக விளையாடி எதிரணி பந்துவீச்சை சிதறடித்தார். இதில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 48 ரன்னில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த சூர்யகுமார் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3ஆவது அரைசதத்தைப் பதிவு செய்தார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த சூர்யகுமார் யாதவும் 62 ரன்களில் போல்டாகி ஆட்டமிழக்க, போட்டியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயரும் 5 ரன்களில் ஆட்டமிழக்க போட்டி இந்திய அணியின் கைநழுவியது.
அதன்பின் அறிமுக வீரர் வெங்கடேஷ் ஐயர் பவுண்டரி விளாசிய கையோடு விக்கெட்டை இழந்தார். இருப்பினும் ரிஷப் பந்த் பவுண்டரி விளாசி போட்டியை இந்திய அணி பக்கம் திரும்பியது. இதனால் 19.4 ஓவர்களில் இந்திய அணி இலக்கை எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
Also Read: T20 World Cup 2021
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது