IND vs NZ 1st Test: நிலையான தொடக்கத்தில் நியூசிலாந்து!

Updated: Fri, Nov 26 2021 14:20 IST
IND vs NZ 1st Test: A solid session for the visitors (Image Source: Google)

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது நியூசிலாந்து அணி. 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-0 என முழுமையாக வென்றது இந்திய அணி. டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் கான்பூரில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரஹானே, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள், 2 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளார்கள். இந்திய அணியில் ஸ்ரேயஸ் ஐயரும் நியூசி. அணியில் ரச்சின் ரவீந்திராவும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகம் ஆகியுள்ளார்கள். 

முதல் நாள் முடிவில் இந்திய அணி, 84 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்தது. ஷ்ரேயஸ் ஐயர் 75, ஜடேஜா 50 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

இன்று, ஜடேஜா ரன் எதுவும் சேர்க்காமல் 50 ரன்களில் செளதி பந்தில் போல்ட் ஆனார். அறிமுக டெஸ்டில் சிறப்பாக விளையாடிய ஷ்ரேயஸ் ஐயர், 157 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் சதமடித்தார். சஹா 1 ரன்னில் ஆட்டமிழக்க அதன்பிறகு 105 ரன்களில் செளதி பந்துவீச்சில் ஷ்ரேயஸ் ஐயர் ஆட்டமிழந்தார்.

நேற்று காயம் காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறி நியூஸி. ரசிகர்களுக்குப் பயத்தை ஏற்படுத்திய டிம் செளதி இன்று 11 ஓவர்கள் தொடர்ச்சியாக வீசினார். இந்த ஆட்டத்தில் நியூசி. அணி மீண்டு வர அவருடைய பந்துவீச்சு பெரிதும் உதவியது. அக்‌ஷர் படேலை 3 ரன்கள் வீழ்த்தினார் செளதி. இது அவருடைய 5-வது விக்கெட். முதல் பகுதியின் கடைசிக்கட்டத்தில் அஸ்வினும் உமேஷ் யாதவும் பொறுப்புடன் விளையாடி மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். அஸ்வின் 5 பவுண்டரி அடித்து ரசிகர்களை மகிழ்வித்தார்.

உணவு இடைவேளைக்குப் பிறகு மீதமுள்ள இரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் அஜாஸ் படேல். அஸ்வின் 38 ரன்களிலும் இஷாந்த் சர்மா ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தார்கள். 

இந்திய அணி 111.1 ஓவர்களில் 345 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி கடைசி 6 விக்கெட்டுகளை 87 ரன்களுக்கு இழந்துள்ளது. நியூசி. தரப்பில் செளதி 5, ஜேமிசன் 3, படேல் 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு வில் யங் - டாம் லேதம் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்துள்ளது. இதனால் 2ஆம் நாள் தேநீர் இடைவேளையின் போது நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்று 72 ரன்களைச் சேர்த்தது. 

இதில் வில் யங் 46 ரன்களையும், டாம் லேதம் 23 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை