இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் கடந்த 25ஆம் தேதி தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 345 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அறிமுக வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் சதமடித்து அசத்தினார். நியூசிலாந்து அணி தரப்பில் டிம் சௌதி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 129 ரன்களைச் சேர்த்திருந்தது.
அதன்பின் வில் யங் 75 ரன்களுடனும், டாம் லேதம் 50 ரன்களுடனும் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். இதில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வில் யங் 89 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய கேப்டன் வில்லியம்சன் 18 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
இதனால் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்களைச் சேர்த்துள்ளது. நியூசிலாந்து அணியில் டாம் லேதம் 82 ரன்களுடன் களத்தில் உள்ளார்.