IND vs NZ: ஒரே போட்டியில் மூன்று சாதனைகளை தகர்த்த ரோஹித்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று ராஞ்சியில் நேற்று நடைபெற்ற 2ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தற்போது 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி முன்னிலையில் உள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய விளையாடிய ரோகித் சர்மா டி20 கிரிக்கெட்டில் மிக முக்கியமான மூன்று சாதனைகளை நேற்றைய ஒரே போட்டியில் படைத்துள்ளார். நேற்றைய போட்டியில் மொத்தம் 36 பந்துகளை சந்தித்த ரோஹித் ஒரு பவுண்டரி மற்றும் 5 சிக்சர்களுடன் 55 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது சாதனைகள் பின்வருமாறு..
அதிக 50+ ஸ்கோர் : டி20 சர்வதேச கிரிக்கெட்டில் அதிக 50 + ரன்களை விளாசியவர் என்ற சாதனையை இதுவரை விராட் கோலி வைத்திருந்தார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் 25ஆவது அரை சதத்தை அடித்த ரோகித் ஏற்கனவே 4 சதங்கள் விளாசி உள்ளதால் மொத்தம் 29 முறை 50 + ரன்கள் அடித்து விராட் கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார்.
விராத் கோலியும் 29 முறை 50 + ரன்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவரைத் தொடர்ந்து பாபர் அசம் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர். இருப்பினும் ரோஹித் ஒருவர் மட்டுமே இவர்களில் 4 சதங்கள் அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாட்னர்ஷிப்பில் அதிக முறை 100 ரன்கள் : டி20 கிரிக்கெட்டில் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடி வரும் ரோஹித் சர்மா அதிக முறை 100 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்த வீரராக இடம்பிடித்துள்ளார். நேற்றைய போட்டியில் ராகுலுடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 117 ரன்கள் குவித்த ரோஹித் 13ஆவது முறை மற்றொரு வீரருடன் சேர்ந்து 100 ரன்களுக்கு மேல் பாட்னர்ஷிப் அமைத்துள்ளார்.
இந்த வரிசையில் அவருக்கு அடுத்து பாபர் அசாம் மற்றும் மார்ட்டின் கப்தில் ஆகியோர் 12 முறை மற்ற வீரர்களுடன் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர். அதேபோன்று வார்னர் 11 முறை 100 மேல் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் கண்ட ஜோடி : டி20 கிரிக்கெட்டில் தற்போது அதிக சதம் கண்ட ஒரு குறிப்பிட்ட ஜோடியாக பாபர் அசாம் மற்றும் முஹம்மது ரிஸ்வான் ஆகியோர் உள்ளனர். மொத்தம் 22 இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ள அவர்கள் ஐந்து முறை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர்.
Also Read: T20 World Cup 2021
இந்நிலையில் ரோஹித் மற்றும் ராகுல் ஆகியோர் 27 முறை ஜோடியாக இணைந்து அதில் 5 முறை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அவர்களின் சாதனையை சமன் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி ரோஹித் ஏற்கனவே தவானுடன் சேர்ந்து நான்கு முறை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.