IND vs NZ: சுப்மன் கில் நிச்சயம் அணியில் இருப்பார் - புஜாரா நம்பிக்கை!

Updated: Tue, Nov 23 2021 16:46 IST
Image Source: Google

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது அண்மையில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரினை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

அதனைத் தொடர்ந்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நாளை மறுதினம் கான்பூர் மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கான முதல் போட்டியில் விராட் கோலி ஓய்வில் இருப்பதன் காரணமாக ரஹானே கேப்டனாக செயல்படவுள்ளார்.

அதேவேளையில் இரண்டாவது போட்டியின்போது அணியுடன் கேப்டன் விராட் கோலி இணைவார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த தொடரில் முக்கிய வீரர்களான ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட் ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில் நாளை மறுதினம் துவங்க இருக்கும் இந்த முதல் டெஸ்ட் போட்டியில் இளம் வீரரான சுப்மன் கில் அணியில் விளையாடுவார் என்று இந்திய அணியின் துணை கேப்டன் புஜாரா உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து பேசிய புஜாரா, “நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் நிச்சயம் சுப்மன் கில் விளையாடுவார். ஆனால் அவர் எந்த இடத்தில் விளையாடுவார் என்பதை இப்போது தெரிவிக்க முடியாது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானதிலிருந்தே கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

நிச்சயம் இந்த தொடரிலும் அவர் இந்திய அணியுடன் இருப்பார். அவரைப் பற்றி அதிகம் கவலைப்பட தேவையில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக எவ்வாறு விளையாடினாரோ அதேபோன்று இந்த தொடரிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்துவார். 

துர்திஷ்ட வசமாக இங்கிலாந்து தொடரை தவறவிட்ட அவர் தற்போது மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். நிச்சயம் அவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் அவர் விளையாடுவார்” என்று தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் மற்றொரு தொடக்க வீரரான கேஎல் ராகுல் காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளதால், நிச்சயம் சுப்மன் கில் பிளேயிங் லெவனில் இருப்பார் என்பது உறுதியாகியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை