IND vs NZ, 1st ODI: இரட்டை சதமடித்து வரலாறு படைத்தார் ஷுப்மன் கில்; நியூசிக்கு கடின இலக்கு!

Updated: Wed, Jan 18 2023 17:24 IST
Image Source: Google

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒரு நாள் போட்டி ஹைதராபாத்தில் தற்போது நடக்கிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. 

அதன்படி, வழக்கம் போல் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் இந்திய அணியின் ரன் கணக்கை தொடங்கினர். இருவரும் பவுண்டரியும், சிக்சருமாக விளாச இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

ஆனால், ரோஹித் சர்மா 34 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த விராட் கோலி 8 ரன்களிலும், இஷான் கிஷான் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்களைத் தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 31 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தார். 

ஒருபுறம் பவுண்டரியாக விளாசிய சுப்மன் கில் தனது 19 ஆவது இன்னிங்ஸில் 3ஆவது சர்வதேச ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார். அதுமட்டுமின்றி அடுத்தடுத்த போட்டிகளில் சதம் விளாசியுள்ளார். இதற்கு முன்னதாக இலங்கைக்கு எதிராக திருவனந்தபுரத்தில் நடந்த 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் சதம் (116 ரன்கள்) அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் மறுமுனையில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 28, வாஷிங்டன் சுந்தர் 12 ரன்கள் என ஆட்டமிழக்க, தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷுப்மன் கில் தனது முதல் 150 ரன்களையும் கடந்தார். அதுவரை பவுண்டரிகளை மட்டுமே அடித்து வந்த ஷுப்மன் கில் அதன்பின் சிக்சர்களாக விளாசி தனது இரட்டை சதத்தை நோக்கி நகர்ந்தார்.

அதிலும் லோக்கி ஃபர்குசன் வீசிய 49ஆவது ஓவரில் அடுத்தடுத்து 3 சிக்சர்களை விளாசி 145 பந்துகளில் தனது முதல் சர்வதேச ஒருநாள் இரட்டை சதத்தைப் பதிவுசெய்தார். மேலும் குறைந்த வயதில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த முதல் வீரர் எனும் சாதனையையும் படைத்துள்ளார். 

மேலும் இந்திய அணி தரப்பில் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த 5ஆவது வீரர் எனும் பெருமையையும் பெற்றுள்ளார். முன்னதாக சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், ரோஹித் சர்மா, இஷான் கிஷான் ஆகியோர் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

அதன்பின் 149 பந்துகளில் 19 பவுண்டரி, 9 சிக்சர்கள் என 208 ரன்களை எடுத்திருந்த ஷுப்மன் கில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 349 ரன்களைக் குவித்துள்ளது. நியூசிலாந்து தரப்பில் ஹென்றி ஷிப்லி, டேரில் மிட்செல் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை