IND vs SA, 1st ODI: சஞ்சு சாம்சனின் போராட்டம் வீண்; இந்தியாவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று லக்னோவில் நடைபெற்றது. மழையால் ஏற்பட்ட தாமதம் காரணமாக போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டு உள்ளது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்கள் ஜனனிமான் மாலன், குயின்டன் டி காக் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மாலன் 22 ரன்களும், குயின்டன் டி காக் 48 ரன்களும் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்தனர். கேப்டன் பவுமா 8 ரன்களிலும், மார்க் ராம் ரன் எதுவும் எடுக்காமலும் பெவிலியன் திரும்பினர்.
அதன்பின்னர், அதிரடியாக ஆடிய ஹென்ரிச் கிளாசென் ஆட்டமிழக்காமல் 74 ரன்களும், டேவிட் மில்லர் 75 ரன்களும் விளாசினர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 40 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஷுப்மன் கில் மற்றும் கேப்டன் ஷிகர் தவான் இருவரும் அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களோடு நடையைக் கட்டினர். அடுத்து களமிறங்கிய அறிமுக வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டும் 42 பந்துகளைச் சந்தித்து 19 ரன்களை மட்டுமே சேர்த்தார்.
அதனைத்தொடந்து வந்த இஷான் கிஷானும் 37 பந்துகளில் 20 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் - சஞ்சு சாம்சன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை சிறுக சிறுக உயர்த்தினர்.
இதில் அதிரடியாக விளையாட தொடங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 31 பந்துகளில் அரைசதம் கடக்க, மறுமுனையில் சஞ்சு சாம்சன் ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்துவந்தார். அதன்பின் 50 ரன்களோடு ஸ்ரேயாஸ் ஐயரும் விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து சஞ்சு சாம்சனுடன் ஜோடி சேர்ந்த ஷர்துல் தாக்கூரும் தன்னால் முடிந்த ரன்களைச் சேர்க்க, மறுமுனையில் சஞ்சு சாம்சன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். ஆனால் 33 ரன்களோடு ஷர்தூல் தாக்கூரும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப இந்திய அணியின் வெற்றி சதவிகிதமும் குறைந்தது. அதன்பின் வந்த குல்தீப் யாதவ், ஆவேஷ் கான் ஆகியோரும் வந்த வேகத்தில் நடையைக் கட்டினர்.
இதனால் கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றிக்கு 30 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது. தப்ரைஸ் ஷம்ஸி வீசிய அந்த ஓவரை எதிர்கொண்ட சஞ்சு சாம்சன் அந்த ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என மொத்தம் 20 ரன்களை மட்டுமே சேர்த்தார்.
இதன்மூலம் 40 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சஞ்சு சாம்சன் 63 பந்துகளில் 3 சிக்சர், 9 பவுண்டரிகள் 86 ரன்களைச் சேர்த்திருந்தார்.
இதனால் தென் ஆப்பிரிக்க அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியதுடன், 1-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.