IND vs SA, 2nd T20I: கிளாசென் அதிரடியில் வீழ்ந்தது இந்தியா; தென் ஆப்பிரிக்கா அசத்தல் வெற்றி!

Updated: Sun, Jun 12 2022 22:24 IST
Image Source: Google

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், 2ஆவது டி20 போட்டி இன்று கட்டாக்கில் நடந்தது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் முதல் ஓவரிலேயே வெறும் ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான இஷான் கிஷன் அதிரடியாக ஆடிய 21 பந்தில் 34 ரன்கள் அடித்தார். நன்றாக அடித்து ஆடிய இஷான் கிஷன் 34 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

ஸ்ரேயாஸ் ஐயர் பெரிதாக அடித்து ஆடாவிட்டாலும் 35 பந்தில் 40 ரன்கள் சேர்த்தார். ஆனால் ரிஷப் பண்ட்(5) மற்றும் ஹர்திக் பாண்டியா(9) ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அக்ஸர்படேலும் 10 ரன் மட்டுமே அடித்தார்.

14வது ஓவரில் களத்திற்கு வந்த தினேஷ் கார்த்திக் முதல் 16 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட அடிக்கமுடியாமல் திணறினார். இன்னிங்ஸின் 19வது ஓவரில் முதல் பவுண்டரி அடித்த தினேஷ் கார்த்திக், கடைசி ஓவரின் 4 மற்றும் 5ஆவது பந்துகளில் 2 சிக்ஸர்களை விளாசி 21 பந்தில் 30 ரன்கள் அடித்து சிறப்பாக முடித்து கொடுத்தார். 

தினேஷ் கார்த்திக்கின் ஃபினிஷிங்கால் 20 ஓவரில் 148 ரன்கள் அடித்த இந்திய அணி, 149 ரன்கள் என்ற கடினமும் இல்லாத எளிதும் இல்லாத ரெண்டுங்கெட்டான் இலக்கை தென் ஆப்பிரிக்காவுக்கு நிர்ணயித்தது.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியில் ரீசா ஹெண்ட்ரிக்ஸ், ப்ரிட்டோரியஸ், வெண்டர் டூசென் ஆகியோர் புவனேஷ்வர் குமாரின் அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.

அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் டெம்பா பவுமா - ஹென்ரிச் கிளாசென் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் பவுமா 35 ரன்களில் விக்கெட்டை இழந்தர்.

ஆனாலும் மறுமுனையில் அதிரடியில் மிரட்டிய ஹென்ரிச் கிளாசென் அரைசதம் விளாசியதுடன் அணியின் வெற்றியையும் உறுதிசெய்தார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 18.2 ஓவர்களில் இலக்கை எட்டி, 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

இதில் அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசென் 81 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றிபெறச் செய்தார். இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் டி20 தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை