ஜோஹன்னஸ்பர்க்கில் சாதனைப் படைத்த அஸ்வின்!
தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 2ஆவது டெஸ்ட் போட்டியானது தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி இந்த போட்டியின் முதல் மூன்று நாட்கள் ஆட்டம் முடிவு பெற்ற வேளையில் இன்னும் இரண்டு நாட்கள் ஆட்டம் நடைபெற இருக்கின்றன.
ஏற்கனவே இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 202 ரன்களை குவிக்க அடுத்து விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணியானது 229 ரன்களை குவித்தது. அதனைத்தொடர்ந்து 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இந்திய அணியானது 266 ரன்களில் ஆட்டமிழந்தது. இதன் காரணமாக தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு 240 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி தங்களது கடைசி இன்னிங்சை விளையாடி வரும் தென் ஆப்பிரிக்கா அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 118 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து உள்ளது. இன்னும் இரண்டு நாள் ஆட்டம் மீதமுள்ளதாலும், வெற்றிக்கு 122 ரன்கள் மட்டுமே தேவை என்பதாலும் தென் ஆப்பிரிக்காவின் கை தற்போது ஓங்கியுள்ளது.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஜோஹன்னஸ்பர்க் மைதானத்தில் ஒரு முக்கிய சாதனை நிகழ்த்தியுள்ளார். அதன்படி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கும்ப்ளேவிற்கு பிறகு குறிப்பிட்ட இந்த மைதானத்தில் விக்கெட் வீழ்த்திய ஸ்பின்னர் என்ற சாதனையை படைத்தார்.
தென் ஆபிரிக்க மண்ணில் இந்திய அணி விளையாடி வரும் அனைத்து போட்டிகளும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்கள் என்பதனால் அஸ்வின் மட்டுமே முதன்மை சுழற்பந்து வீச்சாளராக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.