IND vs SL, 2nd T20I: ஸ்ரேயாஸ், சாம்சன், ஜடேஜா காட்டடி; தொடரை வென்றது இந்தியா!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி தர்மசாலாவில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி முதலில் பொறுமையாக விளையாடிய இலங்கை அணி, கடைசி 5 ஓவரில் 80 ரன்களை விளாசினர். நிசாங்கா 53 பந்துகளில் 75 ரன்கள் விளாச, கேப்டன் சனாகா 19 பந்துகளில் 47 ரன்கள் விளாச, 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் கேப்டன் ரோஹித் சர்மா ஒரு ரன்னிலும், இஷான் கிஷான் 16 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் - சஞ்சு சாம்சன் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 30 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.
மறுமுனையில் அதிரடி ஆட்டத்தைக் கையிலெடுத்த சஞ்சு சாம்சன் 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பினுரா ஃபெர்னாண்டோவின் அபாரமான கேட்சின் மூலம் ஆட்டமிழந்தார்.
ஆனால் அடுத்து களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றியை எளிதாக்கினார்.
இதன்மூலம் 17.1 ஓவர்களிலேயே இந்திய அணி இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
மேலும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் 74 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 45 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.